பவண் கல்யாண் நடிப்பில் த்ரி விக்ரம் இயக்கியிருந்த தெலுங்குப் படமான ‘அத்தரினிகி டேரடி’யின் ரிமேக் தான் இந்த ‘வந்தா ராஜாவாத்தான் வருவேன்’.இதெல்லாம் ஒரு கதை. இதை ரீமேக்க பணம் கொடுத்தெல்லாம் வாங்க வேண்டுமா? என்ற கேள்வி படத்தின் முதல் காட்சியில் தொடங்கி இறுதிக்காட்சி வரை உங்கள் மனசாட்சியை உலுக்கிக்கொண்டே இருக்கக்கூடிய ஒரு சப்பைக் கதை.

ஒரு சுந்தர்.சி. படத்தில் வழக்கமாக என்னவெல்லாம் இருக்கும் என்று சின்னதாக ஒரு பட்டியல் போட்டுப் பாருங்கள். முதலில் கதையில் ஒரு பெருங்கூட்டம் இருக்கும். ஆளாளுக்குக் கூத்தடிப்பார்கள். கதாநாயகிகள் படு செக்ஸியாய் உடை அணிந்திருப்பார்கள். டிராமா ஆர்டிஸ்டுகள் போல் ஒரு ஃப்ரேமுக்கு 30 முதல் 40 பேர் வரை நிற்பார்கள். க்ளைமேக்சை ஒட்டி குரூப்பாக நின்று கூத்தடிக்கும் ஒரு ரீ மிக்ஸ் பாடல் இருக்கும்...இப்படி இன்னும் ஒரு பத்து அயிட்டம் எழுதிப் பட்டியலிடுங்கள். அத்தனையும் இப்படத்திலும் இருக்கின்றன.

சரி கதை என்ற ஒன்றுக்குப் போவோம். ஸ்பெயின் நாட்டில் பெரும் தொழிலதிபராக இருந்துகொண்டிருக்கும் நாசருக்கு உலகம் முழுக்க பிசினஸ் இருக்கிறது. கொஞ்சமே கொஞ்சமாக லட்சம் கோடிக்கு சொத்து வைத்திருக்கிறார். ஆனால் அவர் நிம்மதியாக இல்லை. காரணம் தனது அனுமதியின்றி பிரவுவைக் காதலிக்கும் தங்கை ரம்யா கிருஷ்ணனை வீட்டை விட்டுத் துரத்தி விடுகிறார்.தங்கையைப் பார்த்து 20 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிறது என்கிற துயரம் அவரை விடாமல் துரத்துகிறது.

தாத்தாவின் இந்த துரத்தைப் போக்க அவரது பேரனான சிம்பு சென்னைக்கு வருகிறார். அத்தை ரம்யா கிருஷ்ணனின் வீட்டில் டிரைவர் வேலைக்குச் சேர்ந்து, அந்த அத்தை மகள்களைக் காதலித்து, நடுநடுவே தானும் கன்ஃபியூஸ் ஆகி ரசிகர்களையும் கன்ஃபியூஸ் செய்து இறுதியில் குடும்பத்தை ஒன்று சேர்க்கிறார். ஒரு காட்சியில் ரோபோ சங்கரிடம் ‘நாமளும் சினிமாவுல நடிக்கலாமா?’ என்று கேட்க, அவர் பதிலுக்கு ‘கரெக்ட் டைமுக்கு ஷூட்டிங் போகணுமேப்பா அது நம்மளால முடியாதே’ என்று கலாய்க்கும் காட்சியில் தியேட்டரே அதிருகிறது.

வழக்கம்போல் படத்தில் ஐந்து பாடல்களும், ஐந்து சண்டைக் காட்சிகளும் உள்ளன. நூறு அரிவாள்களுடன் சூழும் ராட்சச அடியாட்களை சிம்பு வெறும் கையால் எதிர்கொண்டு நாசம் செய்வதெல்லாம் படம் எடுத்தா லாஜிக் இல்லாமத்தான் எடுப்பேன் என்கிற சுந்த.சி.யின் ரகம். டைரக்‌ஷன் பத்தியெல்லாம் எதுவும் சொல்லவேண்டியதில்லை என்பதில் மிகத் தெளிவாக இருக்கிறார்.

சிம்புவை விட வழக்கம்போல் அவரது விரல்கள் ஓவராக நடிக்கின்றன. அவரது பத்து விரல்களில் ஒரே ஒரு விரலையாவது கடித்துவைத்து விடத்துடித்தால் நீயும் ஒரு நியாயமான சினிமா ரசிகனே என்று சொல்வதைத் தவிர வேறு ஒன்றும் சொல்லத்தோன்றவில்லை. க்ளைமேக்ஸில் அவர் அழுது நடிக்க முயலும் காட்சியில் சிரிப்பு பொத்துக்கொண்டு வருகிறது.

நாயகிகளாக கேத்ரின் தெரசா, மேகா ஆகாஷ் இருவரும் நன்றாகக் காட்டுகிறார்கள் நடிப்பைத் தவிர மற்ற அத்தனையையும்.எல்லாக் காட்சிகளிலும் சிம்புவின் கூடவே இருக்கும் ரோபோ சங்கர், வி.டி.வி.கணேஷை விட இடைவேளைக்கு அப்புறம் சில காட்சிகளே வரும் யோகி பாபு நன்றாகவே சிரிக்கவைக்கிறார். குறிப்பாக சிம்புவை அவர் கலாய்க்கும் காட்சிகள்தான் படத்தால் காயம் பட்டிருக்கும் ரசிகனுக்கு ஒரே ஆறுதல் மருந்து.

இசையமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழா. பாடல்களும் பின்னணி இசையும் ஐயகோ வகையறா.

மற்றபடி, மூளையைக் கழட்டி பேண்டின் இடது பக்க பாக்கெட்டில் வைத்துவிட்டுப் பார்க்கவேண்டிய படங்களுல் ஒன்று தான் இந்த ’வ.ரா.வ’. சிம்புவின் கட் அவுட்களுக்கு பால் ஊற்றினார்களோ இல்லையோ படம் பார்க்க வந்த ரசிகர்களுக்கு அண்டா அண்டாவாக மறக்காமல் ஊற்றுகிறார்கள்.

ஒரு முக்கியமான பின் குறிப்பு; ஃப்ளாஷ்பேக் காட்சி ஒன்றில் நடிகர் பிரபுவும் ரம்யா கிருஷ்ணனும் திருமணம் முடித்துக்கொண்டு நாசரைப் பார்க்கவரும் காட்சியில் சின்ன வயது கெட் அப்பில் சாட்சாத்  நம்ம பிரபுவும், ரம்யா கிருஷ்ணனுமே நடித்திருக்கிறார்கள்.