மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கத்தில், அஜித் நடிப்பில் வெளியான படம் "நேர்கொண்ட பார்வை".  

இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து, அஜித்தின் 60-வது படத்திலும் இந்தக் கூட்டணி இணைந்துள்ளது. இந்தப் படத்துக்கு "வலிமை" என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. 

கடந்த 18-ம் தேதி பூஜையுடன் தொடங்கப்பட்ட இந்தப் படம், ஆக்ஷன் ஜானரில் உருவாகவுள்ளது. நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து, வலிமைக்கும் நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய யுவன்சங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார்.

இதனிடையே, வலிமை படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு வரும் டிசம்பரில் டெல்லியில் தொடங்கவுள்ளதாகவும், அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் படத்தை முடிக்க படக்குழு ப்ளான் செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

மேலும், படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகையர் குறித்த அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.