கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
Lyricist Vairamuthu
தமிழ் இலக்கிய உலகிலும், திரையுலகிலும் மகத்தான கவிஞராக வலம் வருபவர் வைரமுத்து. இவர் கவிஞர், பாடலாசிரியர், எழுத்தாளர் என பன்முகத் திறமையாளராக வலம் வருகிறார். தனது ஆத்மார்த்தமான கவிதைகளாலும், ஆழமான வரிகளாலும், கருத்துக்களாலும், சமூக சிந்தனைகளாலும் பல்லாயிரக்கணக்கான தமிழ் ரசிகர்களை கவர்ந்துள்ளார். தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மெட்டுப்பட்டி என்கிற சிறு கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர் வைரமுத்து. சிறு வயது முதலே இலக்கியத்தின் மீதும் தமிழ் மீதும் பெரும் ஆர்வம் கொண்டிருந்தார். தனது பள்ளிப் பருவத்திலேயே கவிதைகள் எழுதத் தொடங்கினார். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் இளங்கலை மற்றும் முதுகலை தமிழ் இலக்கியம் படித்து முடித்துள்ளார். அவரது இலக்கியப் புலமை வளர்வதற்கு அவரது கல்லூரி நாட்கள் மிகப்பெரும் அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தது.
வைரமுத்து எழுதிய முதல் பாடல்
பின்னர் திரைப்படங்களுக்கு பாடல் எழுத தொடங்கினார். 1980 ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கிய ‘நிழல்கள்’ திரைப்படத்தில் “ஒரு பொன்மாலைப் பொழுது..” என்கிற பாடலை எழுதியதன் மூலமாக தமிழ் திரையுலகில் பாடலாசிரியராக அறிமுகமானார். தனது முதல் பாடலே மிகப் பெரும் வெற்றி பாடலாக அமைய, அதை தொடர்ந்து அவர் பல்லாயிரக்கணக்கான பாடல்களை எழுதி, தமிழ் திரை இசை ரசிகர்களின் மனங்களில் நீங்காத இடம் பிடித்திருக்கிறார். அவரது பாடல்களில் தமிழ் மொழியின் வளமும், அழகான கவிதை வரிகளும் நிறைந்திருக்கும். காதல் பாடல்கள் மட்டுமல்லாமல் சமூகத்தை சீர்திருத்தப் பாடல்கள், தத்துவம், வாழ்வியல் நெறிகள் போன்ற பல்வேறு கருத்துக்களை தனது பாடல்கள் மூலமாக வெளிப்படுத்தினார். நாட்டுப்புற இசை, துள்ளல் இசை, மெல்லிசை என பல்வேறு வகையான பாடல்களுக்கு வரிகளை எழுதியுள்ளார்.
விருதுகளை குவித்துள்ள வைரமுத்து
அதிக எண்ணிக்கையிலான தேசிய விருதுகளைப் (7 விருதுகள்) பெற்ற பாடலாசிரியர் என்கிற பெருமையும் பெற்றுள்ளார். ‘ஒரு கிராமத்து நதி’, ‘திருத்தி எழுதிய தீர்ப்புகள்’, ‘என் பழைய பல்லவி’ போன்ற கவிதை நூல்களையும், ‘கள்ளிக்காட்டு இதிகாசம்’, ‘கருவாச்சி காவியம்’, ‘மூன்றாம் உலகப் போர்’ போன்ற புதினங்களையும் எழுதியிருக்கிறார். இதில் ‘கள்ளிக்காட்டு இதிகாசம்’ புத்தகம் இந்தியாவின் உயரிய இலக்கிய விருதான சாகித்ய அகாடமி விருது பெற்றுள்ளது. இது மட்டுமல்லாமல் பத்மஸ்ரீ, பத்மபூஷன் போன்ற இந்தியாவின் உயரிய விருதுகளையும், தமிழக அரசின் உயரிய விருதான கலைமாமணி போன்ற பல விருதுகளையும் வைரமுத்து பெற்றுள்ளார். தனது நீண்டகால பொது வாழ்க்கையில் சில விமர்சனங்களையும், சர்ச்சைகளையும் எதிர்கொண்டு வருகிறார். குறிப்பாக பின்னணி பாடகி சின்மயி இவர் மீது வைத்த பாலியல் குற்றச்சாட்டுகள் திரையுலகில் அதிர்வுகளை ஏற்படுத்தின.
வைரமுத்துவின் எக்ஸ் பதிவு
ஆனால் சின்மயி முன்வைத்த குற்றச்சாட்டுகளை வைரமுத்து மறுத்தார். இந்த நிலையில் தற்போது அவர் தன் மீது வைக்கப்படும் ஒரு புகார் பற்றி விளக்கம் கொடுத்துள்ளார். ஆனால் அது சின்மயி பற்றிய புகார் கிடையாது. இது வேறு ஒரு புகார். அவர் எழுதும் பாடல் வரிகளை மாற்றிக் கொடுக்க முடியாது தான் கூறுவதாக பலரும் புகார் செய்வதாக கூறியுள்ளார். தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “என் மீது ஒரு பழி உண்டு. பாடல்களில் திருத்தம் கேட்டால் செய்யமாட்டேன் என்று. அது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது. திருத்தத்திற்கு ஒரு கருத்தமைதி வேண்டும். இருந்தால், அதற்கு நான் உடனே உடன்படுவேன்; மாற்றியும் கொடுப்பேன்; கொடுத்திருக்கிறேன். ‘புன்னைகை மன்னன்’ படத்தில் “வான் மேகம் பூப்பூவாய்த் தூவும்..”என்றொரு பாட்டு. மழையில் நனையும் ஒரு மான்குட்டி தன் கவிதையால் மழையைக் குளிப்பாட்டும் பாட்டு. “மழைத்துளி தெறித்தது, எனக்குள்ளே குளித்தது, நினைத்தது பலித்தது, உயிர்த்தலம் சிலிர்த்தது..” என்று எழுதியிருந்தேன்.
வரிகளை மாற்ற மாட்டேன் - வைரமுத்துவின் பிடிவாதம்
‘உயிர்த்தலம்’ என்பதை மட்டும் மாற்றிக்கொடுங்கள்’ என்றார் இசையமைப்பாளர். ஏன் என்றேன்?. “நீங்கள் எழுதிய பொருளில் புரிந்துகொள்ளாமல் அதைப் பெண்ணுறுப்போடு சம்பந்தப்படுத்திப் பிரச்சனை செய்வார்கள்” என்றார். சிந்தித்தபோது சரியென்றே பட்டது. நான் உடனே “நினைத்தது பலித்தது, குடைக்கம்பி துளிர்த்தது..” என்று மாற்றிக்கொடுத்தேன். இதில் நியாயம் இருக்கிறது. இன்னொரு படம் ‘மனிதன்’. அதில் “வானத்தைப் பார்த்தேன் பூமியைப் பார்த்தேன்..” என்றொரு பாடல். “குரங்கிலிருந்து பிறந்தானா? குரங்கை மனிதன் பெற்றானா? யாரைக் கேள்வி கேட்பது? டார்வின் இல்லையே..?” என்று எழுதியிருந்தேன்.
“என் மீதே பழி வருகிறது” வைரமுத்து வேதனை
இயக்குநர் எஸ்.பி.முத்துராமனின் உதவியாளர் லட்சுமி நாராயணன் என் காதோடு வந்து “டார்வின் என்பதை மட்டும் மாற்றுங்கள்; அது எல்லாருக்கும் புரியாது” என்றார். நான் புன்னகையோடு சொன்னேன்: “தெரிந்ததை மட்டும் சொல்வதல்ல பாட்டு; தெரியாததைச் சொல்லிக் கொடுப்பதும் பாட்டு” என்று மாற்ற மறுத்துவிட்டேன். எஸ்.பி.முத்துராமனிடம் சென்று நான் சொன்னதைச் சொல்லியிருக்கிறார். அவரும் இதற்குமேல் வற்புறுத்த வேண்டாம் என்று வருத்தத்தோடு விட்டுவிட்டார். டார்வின் பேசப்பட்டது. இப்படி நியாயமான பொழுதுகளில் மாற்ற மறுத்திருக்கிறேன். பாட்டுவரியின் திருத்தத்தைப் பொருளமைதியே தீர்மானிக்கிறது; நானல்ல. ஆனால் பழி என்மீதே வருகிறது என்ன செய்ய?” என்று வேதனையுடன் பகிர்ந்துள்ளார்.
