பழம்பெரும் திரைப்பட தயாரிப்பாளரும், ஏவிஎம் நிறுவனத்தின் உரிமையாளருமான ஏவிஎம் சரவணன் காலமான நிலையில், அவருக்கு இரங்கல் தெரிவித்து கவிஞர் வைரமுத்து பதிவிட்டுள்ளார்.
Vairamuthu Mourns For the Demise of AVM Saravanan : நேற்று தனது 86-வது பிறந்தநாளை கொண்டாடிய ஏவிஎம் சரவணன் இன்று சென்னையில் காலமானார். இவரது உடல் சென்னை ஏவிஎம் ஸ்டியோவில் உள்ள 3-வது தளத்தில் பொதுமக்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இவரது மறைவு திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் என பல்வேறு மொழி திரைப்படங்களை தயாரித்துள்ளார். இவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து கவிஞர் வைரமுத்து போட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது.
வைரமுத்து இரங்கல்
அந்த பதிவில், “மதிப்புக்குரிய ஏவி.எம்.சரவணன் இயற்கை எய்திவிட்டார். இன்று என் அதிகாலையின் இருள் வடியவே இல்லை. என்னசொல்லிப் புலம்புவது? 44 ஆண்டுகால நட்பு காலமாகிவிட்டது என்று கலங்குவேனா? ஏவி.எம்மின் அடையாளம் போய்விட்டதே என்று வருந்துவேனா? ஆயிரம் பறவைகளுக்குக் கனி கொடுத்த கலை ஆலமரத்தின் கிளை முறிந்ததே என்று வாடுவேனா? திரையுலகில் என்னைத் தாங்கிப்பிடித்த ஒரு தங்கத் தூண் சாய்ந்துவிட்டதே என்று கலங்குவேனா?

கலையுலகில் எங்களது சந்திப்பு மையம் வெறிச்சோடிவிட்டதே என்று விசும்புவேனா? நண்பர் சகோதரர் வழிகாட்டி இனி யார் உண்டு என்று தவிப்பேனா? தமிழ்த் திரையுலகின் வரலாறு சொல்லும் ஆசிரியர் மறைந்துவிட்டாரே என்று பதைப்பேனா? புரியவில்லை, எனது மகா ரசிகர். ஏவி.எம் நிறுவனத்தில் அதிகமான பாடல் எழுதிய கவிஞர் என்ற அருமையான பெருமையை எனக்களித்தவர். எல்லாராலும் மதிக்கப்பட்ட வெள்ளுடை ஆளுமை.
கையொடிந்து தவிக்கிறது இன்று கலையுலகம். அவரை இழந்துவாடும் குடும்பத்தார்க்கும் கலையுலகத்துக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறேன். அவர் நினைவுகள் நீடு வாழும், என் ஆறாத்துயரம் ஆறுவதற்குக் காலமே கைகொடு” என பதிவிட்டுள்ளார் கவிஞர் வைரமுத்து.


