கவிஞர் வைரமுத்துவிற்கு தனியார் பல்கலைக்கழகம் சார்பில் இன்று கவுரவ டாக்டர் பட்டம் கொடுப்பதாக இருந்தது. அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி, ஏன் அழைப்பிதழ்கள் கூட கொடுத்தாகிவிட்டது. அந்த அழைப்பிதழ் தான் இப்போது வைரமுத்துவிற்கு டாக்டர் பட்டம் கிடைக்காமல் போனதற்கும் காரணமாகிவிட்டது. 

கடந்த ஆண்டு உலகையே உலுங்கிய மீடூ புகார்கள், இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. பாலிவுட், டோலிவுட், கோலிவுட் என வரிசையாக நடிகைகள் தங்களது நேர்ந்த பாலியல் நெருக்கடிகள் குறித்து வெளிப்படையாக பேச ஆரம்பித்தனர். மீடூ விவகாரம் பூதாகரமானதைத் தொடர்ந்து, அதை விசாரிப்பதற்காக மத்திய அரசு சார்பில் ஒரு உயர்மட்ட குழு அமைக்கப்பட்டது. அதற்கு தற்போது பாதுகாப்புத்துறை அமைச்சராக உள்ள ராஜ்நாத் சிங் தான் தலைமை வகித்தார். 

ஆனால் அந்த குழு இதுவரை எவ்வித விசாரணைகளையும் நடத்தியதாக தெரியவில்லை. இந்நிலையில் அந்த தனியார் பட்டமளிப்பு விழாவில் வைரமுத்துவிற்கு, ராஜ்நாத் சிங் தான் டாக்டர் பட்டம் வழங்குவதாக இருந்தது. பாலியல் புகாரில் சிக்கிய வைரமுத்துவிற்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் டாக்டர் பட்டமளிப்பது வேடிக்கையாக உள்ளதாக பாடகி சின்மயி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். 

அதற்கு முன்னதாக அந்நிகழ்ச்சிக்கான அழைப்பிதழுடன், வைரமுத்துவை கடுமையாக விமர்சித்து காரசாரமாக சின்மயி போட்ட டுவிட்டர் பதிவுகள் சோசியல் மீடியாவில் வைரலானது. சின்மயின் அந்த டுவிட்டர் பதிவிற்கு ஆதரவும், எதிர்ப்பும் கணிசமான அளவில் இருந்தது. 

இந்நிலையில் தனியார் பல்கலைக் கழகத்தின் பட்டமளிப்பு விழாவை ரத்து செய்வதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவித்துள்ளதாக தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் எல்.ஜி.சூர்யா அறிவித்திருந்தார். இதையடுத்து புதிதாக அச்சடிப்பட்ட அழைப்பிதழில் வைரமுத்துவின் பெயர் நீக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இன்று வைரமுத்துவிற்கு கிடைத்திருக்க வேண்டிய கவுரவ டாக்டர் பட்டம் காற்றில் பறந்துவிட்டதாக சின்மயி ஆதரவாளர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.