vairamuthu congratulated the movie which is he writes lyrics

எல்லா துறைகளிலும் தகுதி மிக்கவர்கள் தகுதி மிக்க இடத்தை அடைய வேண்டும் என்ற கருத்தை மையமாக கொண்டுதான் இந்தபடம் உருவாகியுள்ளது என்று நெஞ்சில் துணிவிருந்தால் படத்தை பெற்றி வைரமுத்து தெரிவித்துள்ளார்.

சந்தீப் கிஷன், விக்ராந்த், சூரி ஆகியோர் நடிக்க சுசீந்திரன் இயக்கத்தில் வெளியாக உள்ள படம் "நெஞ்சில் துணிவிருந்தால்".

இப்படத்தில் கவிஞர் வைரமுத்து பாடல் எழுதியிருக்கிறார். வரும் வெள்ளியன்று வெளியாக இருக்கும் இப்படத்திற்கு வைரமுத்து தன் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது:

“தன் படைப்புக்குள் ஓர் உள்ளடக்கம் இருக்க வேண்டும் என்ற துடிப்புதான் சுசீந்திரனின் பலம். இதுவரைக்கும் அவர் படைத்த படைப்புகள் பெரும்பாலும் வெற்றியை மட்டுமே தொட்டிருக்கின்றன. அந்த வரிசையில் இன்னொரு வெற்றிப்படைப்பான சுசீந்திரனின் நெஞ்சில் துணிவிருந்தால் வெளிவருகிறது.

இந்த படைப்பு சமூகத்திற்க்கு ஒரு செய்தி சொல்லும் படைப்பாக இருக்கும். தகுதி மிக்கவர் கைகளிலேயே இந்த சமூகம் இயங்க வேண்டும். இந்த மையத்தை வைத்து இந்த படைப்பு இயங்குகிறது.

அரசியல், கலை, சமூகம், அரசாங்கம், கல்வி, நீதி, மருத்துவம் எல்லா துறைகளிலும் தகுதி மிக்கவர்கள் தகுதி மிக்க இடத்தை அடைய வேண்டும் என்ற உன்னத இலட்சியத்தை உள்ளடக்கமாக கொண்டு இந்த படம் இயங்குகிறது.

இதில் நானும் பாடல் எழுதியிருப்பது எனக்கு கிடைத்த பெருமையாகும். போர்கள் கொலையை வெறுத்ததில்லை, சமூகம் கொலையை வெறுத்திருக்கின்றது. யுத்தத்தில் கொலைதான் தர்மம். இந்த சமூகம் எப்போது யுத்தத்தில் இருக்கிறதோ அப்போது கொலையும் கூட அறமாகிவிடுகிறது என்ற கீதையின் கருத்தையும், யுத்த தர்மத்தையும் இந்த படம் முன்னிலை படுத்துகிறது.

சுசீந்திரன் தொட்டதெல்லாம் வெற்றி படம் தான். இந்த படம் வெற்றியின் இன்னொரு உயரத்தை எட்ட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். எட்டும் என்று நம்புகிறேன் எட்டித் தீரும் என்று வாழ்த்துகிறேன்” என்று அவர் தெரிவித்தார்.