இந்தியாவின் 13வது குடியரசுத் தலைவரான பிரணாப் முகர்ஜி, கடந்த சில நாட்களாகவே உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார்.  84 வயதான பிரணாப் முகர்ஜிக்கு மூளையில் கட்டி இருந்ததால் டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆகஸ்ட் 10ம் தேதி மூளை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதன் பின்னர் பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா தொற்று இருப்பதும் கண்டறியப்பட்டது.

இதனைத் தொடர்ந்து வென்டிலேட்டர், எக்மோ கருவிகளின் உதவியுடன் பிரணாப் முகர்ஜிக்கு தொடர் சிகிச்சைகள் வழங்கப்பட்டது. இருப்பினும் கோமா நிலைக்குச் சென்ற பிரணாப் முகர்ஜியின் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்தது. இந்நிலையில் சற்று நேரத்திற்கு முன்பு டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் பிரணாப் முகர்ஜி சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அவருடைய மகன் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் மறைவிற்கு தற்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உட்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், திரைத்துறையினர், விளையாட்டு வீரர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பிரணாப் மறைவுக்கு கவிப்பேரரசு வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் கவிதை ஒன்றை பதிவிட்டுள்ளார். 


பிரணாப் முகர்ஜி மறைவுக்கு
இந்தியா எழுந்து நின்று மெளனிக்கிறது.

உழைப்பில் உறங்காப்புலி இறுதியாய்
உறங்கிவிட்டது.

பாரதத்தின் உயரங்களை வளர்த்தெடுத்த
பாரத ரத்னா விடைகொண்டார்.

போய் வாருங்கள் பிரணாப்!
இந்தியா உங்களை 
நீண்டகாலம் நினைக்கும்.
என பதிவிட்டுள்ளார்.