கொரோனா பிரச்சனையிலிருந்து மீண்ட திரையுலகம் தற்போது தான் சற்றே நிம்மதி பெருமூச்சு விட ஆரம்பித்துள்ளது. கிட்டதட்ட 7 மாதங்களுக்குப் பிறகு திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளன, படப்பிடிப்புகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உட்பட முன்னணி பிரபலங்கள் பலரும் படப்பிடிப்பில் கலந்து கொள்ள ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில்  இன்று காலை முதலே படுவேகமாக பரவி வரும் ஒரு செய்தி கோலிவுட் வட்டாரத்தை பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது. 


தமிழ் திரையுலகின் முன்னணி பாடலாசிரியரும் கவிஞருமான கவிப்பேரரசு வைரமுத்து இன்று காலை திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காலை திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டத்தை அடுத்து அவரது குடும்பத்தினர் உடனடியாக அவரை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இருதய நோய் பிரச்சனை காரணமாக வைரமுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

 

ஆனால் வைரமுத்து தரப்பிலிருந்து விளக்கம் அளித்துள்ள அவருடைய உதவியாளர், அவர் வழக்கமான சோதனைகளுக்காக மட்டுமே மருத்துவமனை வந்துள்ளதாகவும், கவிப்பேரரசு நல்ல உடல் நலத்துடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இந்த செய்தி திரையுலகினரையும், ரசிகர்களையும் சற்றே நிம்மதியடைய வைத்துள்ளது.