’வடிவேலுவை வைத்து நான் இயக்கவிருக்கும் ‘பேய் மாமா’ படத்துக்கு எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் அதை எதிர்கொள்ளத்தயாராக இருக்கிறேன். அப்படத்தை நான் இயக்கியே தீருவேன்’ என்கிறார் இயக்குநர் ஷக்தி சிதம்பரம்.

 சுமார்  இருவாரங்களுக்கு முன்பு  வடிவேலு ‘பேய் மாமா’ என்ற புதிய படத்தில் நடிக்க உள்ளதாகவும் இந்த படத்தை ஷக்தி சிதம்பரம் இயக்க உள்ளதாகவும் அறிவிப்பு வெளியாகி இருந்தது. படத்தில் வடிவேலுவின் தோற்றத்தையும் வெளியிட்டனர். இப்படத்தின் துவக்க கட்டப்பணிகள் விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில், தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து கடுமையான எச்சரிக்கைகள் வந்ததால் ஷக்தி சிதம்பரம் ‘பேய் மாமா’வைத் தற்காலிகமாகத் தள்ளிவைத்திருப்பதாகத் தகவல்கள் வந்தன.

தற்போது அத்தகவல்களை மறுக்கிறார் இயக்குநர் ஷக்தி சிதம்பரம். இது குறித்துப் பேசிய அவர்,’’வடிவேலுவுக்கும் எனக்குமான நட்பு எனது ‘என்னம்மா கண்ணு’ படத்தில் தொடங்கிய 19 ஆண்டுகால நட்பாகும். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு நான் வடிவேலை அவரது அலுவலகத்தில் சந்தித்து இந்த ‘பேய் மாமா’ கதையைச் சொன்னேன். கதை அவருக்கு மிகவும் பிடித்திருந்ததால் உடனே ஓ.கே.சொன்னார்.

இதற்கான படப்பிடிப்புக்கு நாங்கள் ஆயத்தமாகிவரும் நிலையில் அவருக்கு தயாரிப்பாளர் சங்கம் ரெட் கார்டு போட்டிருப்பதாகவும், படப்பிடிப்பு நடத்த தடை என்றும் செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. வடிவேலுவை வைத்துப் படம் இயக்கக்கூடாது என்று யாரும் என்னிடம் இதுவரை அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. எனவே திட்டமிட்டபடி விரைவில் ‘பேய் மாமா’ படப்பிடிப்பு துவங்கும். இது தொடர்பாக சட்டப்படி என்ன பிரச்சினைகள் வந்தாலும் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறோம்’ என்கிறார் ஷக்தி சிதம்பரம். ஆனால் நடிகர் வடிவேலு இப்படம் குறித்து இதுவரை வாயைத் திறக்கவில்லை.