வைகை புயல் வடிவேலு இல்லை என்றால், மீம்ஸ் போட்டு கலாய்த்து வருபவர்களுக்கு வேலையே இல்லை என்று சொல்லலாம். காமெடியில் எத்தனை வகை உள்ளதோ அத்தனையையும் நடித்து விட்டு தற்போது ரெஸ்டில் இருக்கிறார் வடிவேலு.

நன்றாக சென்றுக்கொண்டிருந்த இவருடைய காமெடி வாழ்க்கையில் திருப்பு முனையை ஏற்படுத்தியது, இவரின் கதாநாயகன் ஆசை எனலாம். அரசியல் ரீதியாகவும் இவர் சில சர்ச்சைகளில் சிக்கினார்.

இவர் கதாநாயகனாக அறிமுகமான '23  ஆம் புலிகேசி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றாலும்... இந்த படத்தை தொடர்ந்து இவர் ஹீரோவாக நடித்த படங்கள் மண்ணை கவ்வியது.

மேலும் ஒரு சில பிரச்சனைகளால் நடிப்புக்கு, சிறிது காலம் இடைவெளி விட்டு, கத்தி சண்டை படத்தில் ரீ என்ட்ரி கொடுத்தார், மேலும் இயக்குனர் சங்கர் தயாரிப்பில் '24 ஆம் புலிகேசி' படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி அதில் தற்போது பிரச்சனை நீடித்து வருவதால்... வடிவேலுவு நடிக்க ரெட் கார்டு போடப்பட்டுள்ளது.

இப்படி பல பிரச்சனைகளில் சிக்கி தவித்து வரும் வடிவேலு குடும்பத்தில் மங்களகரமான நிகழ்ச்சி ஒன்று அரங்கேறியுள்ளது. அதாவது இன்று நடிகர் வடிவேலுவின் மகள் கலைவாணிக்கும் ராமலிங்கம் என்பவருக்கு மதுரையில் உள்ள பிரபல திருமண மஹாலில் மிகவும் பிரமாண்டமாக திருமணம் நடைபெற்றது.  

இதில் பெரிதாக திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் யாரையுமே வடிவேலு அழைக்கவில்லை.   திரையுலகில் மிகவும் நெருக்கமான ஒரு சிலர் மட்டுமே கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.