வெளியான முதல் இரண்டு நாளில் மட்டும் சுமார் 20 கோடி ரூபாய் அளவிற்கு வசூல் செய்து வட சென்னை திரைப்படம் சாதனை படைத்துள்ளது. தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான வட சென்னை திரைப்படம் கடந்த புதனன்று வெளியானது. படம் சிறப்பாக இருப்பதாக விமர்சனங்கள் வெளியான நாளில் முதல் நாள் மட்டும் அல்லாமல் 2வது நாளிலும் வட சென்னை வெளியான திரையரங்குகளில் கூட்டம் அலைமோதுகிறது. மேலும் ஆயுதபூஜை விடுமுறை என்பதால் வழக்கத்தை விட கூடுதல் திரையரங்குகளிலும் வட சென்னை வெளியாகியுள்ளது. 

வட சென்னை திரைப்படம் வெளியான முதல் நாளில் சென்னையில் மட்டும் சுமார் 82 லட்சம் ரூபாய் வசூல் செய்து கொடுத்தது. இரண்டு நாட்களில் சென்னை வசூல் தொகையானது ஒரு கோடியே 35 லட்சம் ரூபாயாக உயர்ந்தது. இதே போல் தமிழகம் முழுவதும் முதல் நாளில் வசூல் 7 கோடியே 24 லட்சம் ரூபாயாக இருந்த வசூல் 2வது நாளில் சுமார் 15 கோடி ரூபாய் அளவிற்கு அதிகரித்துள்ளது. 

அமெரிக்கா உள்ளிட்ட வெளி நாடுகளிலும் வட சென்னை திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு எழுந்துள்ளது. இதனால் வெளியான இரண்டு நாட்களில் வட சென்னை திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் 20 கோடி ரூபாய் அளவிற்கு வசூலை வாரிக்குவித்துள்ளது. மேலும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் வார இறுதிக்குள் வட சென்னை 50 கோடி ரூபாய் வசூலை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தனுஷ் நடிப்பில் வெளியான படங்களிலேயே முதல் படமாக வட சென்னை 100 கோடி ரூபாய் வசூல் கிளப்பில் இணையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.