வாலி (Vaali) பட ரீமேக் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் போனி கபூருக்கு சாதகமாக தீர்ப்பு வந்ததை அடுத்து எஸ்.ஜே.சூர்யா (SJ Suryah) உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்திருந்தார்.

பிரபல இயக்குனர் எஸ். ஜே. சூர்யா 1999ஆம் ஆண்டு தனது முதல் படைப்பாக இயக்கிய படம் வாலி. அஜித் - சிம்ரன் நடிப்பில் வெளியான இந்த படத்தில் அஜித் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். இந்தப் படம் தமிழில் மிகப்பெரிய ஹிட் அடித்தது. தேவா இசையில் பாடல்கள் அனைத்தும் இன்றளவும் ரசிக்கப்பட்டு வருகிறது.

முதல் படத்திலேயே வித்தியாசமான கதையோடு சாதித்த எஸ்.ஜே சூர்யா அதன் பிறகு தமிழில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக மிளிர துவங்கினார். இவ்வாறு எஸ் ஜே சூர்யாவின் சாதனை பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ள வாலி படத்தை இந்தியில் ரீமேக் செய்யும் உரிமையை வலிமை பட தயரிப்பாளர் போனி கபூர் வாங்கினார்.

ஆனால் வாலி படத்தை இந்தியில் ரீமேக் செய்வதற்கு போனி கபூருக்கு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி எஸ்.ஜே. சூர்யா நீதிமன்றத்தை அணுகினார். இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் போனி கபூருக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இதையடுத்து வாலி ரீமேக் தொடர்பாக இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா உச்ச நீதிமன்றத்தை நடினார். கடந்த 2017 ஆம் ஆண்டு "ஆரண்ய காண்டம் பட தயாரிப்பாளர்கள் மீது அப்படத்தின் இயக்குநர் தியாகராஜ குமாரராஜா தாக்கல் செய்த வழக்கில், “படத்தின் டப்பிங் உரிமை தயாரிப்பாளருக்கு இருந்தாலும் அதன் ரீமேக் உரிமை கதையை எழுதியவருக்கே இருக்கிறது” என தீர்ப்பளிக்கப்பட்டிருந்தது. 

இந்த தீர்ப்பை அடிப்படையாக வைத்து எஸ்.ஜே.சூர்யா உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து இருந்தார். இந்த வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. அதன்படி ரீமேக் சம்மந்தப்பட்ட உரிமைகள் அனைத்தும் தயாரிப்பாளர் வசமே உள்ளதாகவும், அதனால் அவரிடம் இருந்து முறைப்படி உரிமையைப் பெற்றுள்ள போனி கபூர், வாலி படத்தை ரீமேக் செய்ய எந்த தடையும் இல்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.