துப்பாக்கி, கத்தி ஆகிய பிளாக் பஸ்டர் திரைப்படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஏ.ஆர்.முருகதாசுடன், நடிகர் விஜய் இணைந்திருக்கும் படம் சர்கார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை பிரமாண்டமாக தயாரித்துள்ளது. விஜய்க்கு ஜோடியாக பைரவா திரைப்படத்தில் ஜோடியாக நடித்த கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். ராதாரவி, வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். 

உதயா, அழகிய தமிழ் மகன், மெர்சல் ஆகிய படங்களைத் தொடர்ந்து இந்தப் படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார்,. அண்மையில் வெளியான இப்படத்தின் அனைத்து பாடல்களும் ஹிட்டடித்துள்ளன. துப்பாக்கி, கத்தியை போலவே இந்தப் படமும் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது. மிகப்பெரிய கூட்டணி என்பதால் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. அண்மையில் வெளியான இப்படத்தின் டீசர் பெரும் வரவேற்பைப் பெற்றது. 

இதில் கார்ப்போரேட் மான்ஸ்டர் என்று விஜய் அறிமுகமாகும் வகையில் டீசர் இருக்கும். இந்தியாவில் நடைபெறும் தேர்தலில் தனது வாக்கைப் பதிவு செய்வதற்காக வரும் விஜய், தனது வாக்கை வேறு ஒருவர் போட்டிருப்பதைக் கண்டு, அதில் தொடர்புடைய அரசியல்வாதியுடன் மோதுவதும், அவருக்கு எதிராக மக்கள் படையைத் திரட்டி அரசியல் செய்வது போன்றும் கதைக்களம் இருக்கும் என்று யூகிக்கும் வகையிலான காட்சிகள் டீசரில் இடம்பெற்று இருந்தன.  

இப்படத்திற்கு தணிக்கை வாரியம் யூ/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. ரிலீசாவதற்கு முன்பே பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ள இப்படம் தற்போது அமெரிக்காவில் மிகப்பெரிய சாதனை படைக்கவுள்ளது. ஆம் விஜய் படங்களிலேயே அமெரிக்காவில் அதிக திரையரங்குகளில் திரையிடப்படவுள்ள படம் என்ற சாதனையை சர்கார் படைத்துள்ளது. 

அமெரிக்காவில் மட்டும் மொத்தம் 162 இடங்களில் உள்ள திரையரங்குகளில் சர்காரைக் காணலாம். நமக்கெல்லாம் ரிலீஸ் நவம்பர் 6ஆம் தேதி தீபாவளி அன்று. ஆனால் அமெரிக்காவில் நவம்பர் ஐந்தாம் தேதியே சர்கார் திரையிடப்படுகிறது. நியூயார்க், லாஸ் வேகாஸ், லாஸ் ஏஞ்சல்ஸ் உள்ளிட்ட நகரங்களில் சர்கார் திரையிடப்பவுள்ளது.