காங்கிரஸ் கட்சியிலிருந்து அண்மையில் விலகிய நடிகை ஊர்மிளா, சிவசேனா கட்சியில் இணையப்போவதாக செய்திகள் வெளியானது. ஆனால், நான் எந்த கட்சியிலும் சேரவில்லை என நடிகை ஊர்மிளா மடோங்கர் விளக்கமளித்துள்ளார்.

இந்தியில் வெளியான ‘ரங்கீலா’ படம் மூலம் புகழ்பெற்றவர் பிரபல நடிகை ஊர்மிளா மடோங்கர். இவர் தமிழில் கமல்ஹாசனுடன் இந்தியன் படத்தில் நடித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். கட்சியில் சேர்ந்த அடுத்த சில நாட்களிலேயே மகாராஷ்டிர மாநிலத்தில் வடக்கு மும்பை தொகுதியில் ஊர்மிளா போட்டியிட்டார். இந்த தேர்தலில் சுமார் 4½ லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் மாபெரும் வெற்றி பெற்றார். தேர்தலுக்கு பிறகு அமைதியாகிவிட்ட ஊர்மிளாவை, விரைவில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பயன்படுத்திக்கொள்ள காங்கிரஸ் கட்சி திட்டமிட்டது. மேலும் வெற்றி வாய்ப்புள்ள தொகுதியை மும்பையில் ஒதுக்கவும் காங்கிரஸ் கட்சி முடிவு செய்திருந்தது.

 

இந்நிலையில், திடீரென காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். மேலும், காங்கிரஸ் கட்சியில் சரியான ஒத்துழைப்பு இல்லை. அவர்கள் கட்சியை வளர்க்க ஆர்வமே காட்டவில்லை. அதற்கான முயற்சியும் இல்லை. கட்சியை வளர்ப்பதை விட்டுவிட்டு கோஷ்டி சண்டை போட்டுக்கொள்கின்றனர் என கூறினார். 

இந்நிலையில், ஊர்மிளா உத்தவ் தாக்கரேவுக்கு நெருக்கமான மிலிந்த் நர்வேக்கருடன் தொடர்பில் இருப்பதாகவும், விரைவில் சிவசேனாவில் சேர இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. இதனை நடிகை ஊர்மிளா மடோங்கர் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:- நான் எந்த கட்சியிலும் சேரவில்லை. எனவே இதுபோன்ற தகவல்களை ஊடகங்கள் பரப்ப வேண்டாம். எனக்கு எதிராக இதுபோன்ற தகவல்களை கூறுவது நியாயமற்றது என்று தெரிவித்துள்ளார்.