பிரபல திரைப்பட பின்னணி பாடகர் உன்னி கிருஷ்ணன் பயன்படுத்தும் கிரெடிட் கார்டில் இருந்து ரூ.1.34 லட்சத்தை மர்மநபர்கள் சுருட்டிவிட்டனர். இதுதொடர்பாக அவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.

பிரபல திரைப்ட பின்னணி பாடகர் உன்னிகிருஷணன், கடந்த மாதம் மொரீஷியஸ் நாட்டுக்கு, நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக சென்றார். அங்கு, பண பரிவர்த்தனைக்காக அவரது கிரெடிட் கார்டை பயன்படுத்தியுள்ளார். ஓட்டல் அறை, உணவு சாப்பிடுவது உள்பட பல்வேறு காரணங்களுக்காக பயன்படுத்தியுள்ளார்.

அந்த கிரெடிட் கார்டு, அந்த நாட்டில் உள்ள எஸ்.ஆர்.எல். என்ற வங்கியில் பெறப்பட்டது. உன்னிகிருஷ்ணன் பயன்படுத்திய கிரெடிட் கார்டை போலவே, மர்மநபர்கள் போலி கார்டு தயாரித்துள்ளனர். அதன் மூலம் அந்நாட்டின் மதிப்பில் 2000 டாலர் வரை எடுத்துள்ளனர். அதன் இந்திய மதிப்பு ரூ.1.34 லட்சம் ஆகும்.

இந்நிலையில் சமீபத்தில் சென்னை திரும்பிய அவர், தனது வங்கி கணக்கை சரிபார்த்தார். அப்போது, அவரது கிரெடிட் கார்டின், ரகசிய எண் மற்றும் வங்கி கணக்கை அறிந்து கொண்ட மர்மநபர்கள், போலி கிரெடிட் கார்டு மூலம் ரூ.1.34 லட்சம் அபேஸ் செய்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து சென்னை அண்ணாசாலை போலீசில், உன்னிகிருஷ்ணன் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கி விரைவில் சைபர் கிரைம் போலீசாரின் விசாரணைக்கு பரிந்துரைக்கப்படும் என கூறப்படுகிறது.

தற்போது மத்திய அரசு இணையதளம் மூலம் பண பரிவர்தனை செய்யலாம் கூறி பல்வேறு நடைமுறைகளை அமல்படுத்தி வருகிறது. இதில் பணம் இல்லாமல் எந்த பொருளையும் பெற முடியும், வாங்கலாம் என கூறி வந்தாலும், அதிலும் பல சிக்கல்கள் உருவாகியுள்ளன.

பல்வேறு நாடுகளுக்கு சென்று, பல அனுபவங்கள் பெற்ற பிரபல திரைப்பட பாடகரின் கிரெடிட் கார்டு போல் போலி கார்டை மர்மநபர்கள் தயாரித்து பணத்தை அபேஸ் செய்துள்ளனர். ஆனால், ஒன்றும் தெரியாத பாமர மக்களின் நிலை, இந்த கிரெடிட் கார்டு வந்த பிறகு, என்ன ஆகும் என்பது கேள்விக்குறியாக உள்ளது.