சர்கார் திரைப்படம் முழுக்க முழுக்க அரசியல் திரைப்படமாக உருவாகியுள்ளது. மேலும் வெளிநாட்டில் இருந்து விஜய் தமிழகத்தில் அரசியலில் ஈடுபட்டு முதலமைச்சரை உருவாக்கும் வகையில் கதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை சர்கார் ஆடியோ லாஞ்சிலேயே விஜய் தெரிவித்திருந்தார். இதே போல ஏ.ஆர்.முருகதாசும் கூட படத்தின் கதையை ஓரளவிற்கு தெரிவித்துவிட்டார். ஏற்கனவே கத்தி படத்தில் தி.மு.கவின் 2ஜி ஊழல் பற்றி ஒரு வசனம் இடம்பெற்றிருந்தது.


   

கத்தி படத்தை முருகதாஸ் இயக்கி விஜய் நடித்திருந்தார். எனவே சர்கார் படத்திலும் தி.மு.கவிற்கு எதிரான வசனங்கள் இருக்கலாம் என்கிற சந்தேகம் இருந்தது. மேலும் நடிகர் விஜயை சன் பிக்சர்ஸ் அதிகமாக விளம்பரப்படுத்துவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. தி.மு.கவினர் கொடுத்த பணத்தில் உருவான சன் டிவி தி.மு.கவிற்கு எதிரான மனநிலை கொண்ட விஜயை வைத்து படம் எடுக்கும் போதே தி.மு.கவினர் டென்சன் ஆகினர்.
   

படம் ரிலீஸ் சமயத்தில் அல்லது ரிலீஸ் ஆன பிறகு தவறாக எந்த வதந்தியும் பரவி விடக்கூடாது என்பதில் சன் பிக்சர்ஸ் உறுதியாக இருந்தது. இதே போல் சர்கார் படத்தில் தி.மு.கவிற்கு எதிராக ஏதேனும் இருக்கிறதா என்கிற சந்தேகம் ஸ்டாலின் தரப்புக்கும் இருந்தது. இதனால் படத்தை ஸ்டாலினுக்கு போட்டுக் காட்ட சன் பிக்சர்ஸ் முடிவு செய்தது. ஆனால் ஸ்டாலின் லண்டன் சென்றுவிட்டார்.
 

இதனால் ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலினுக்கு சர்கார் படத்தை சன் பிக்சர்ஸ் போட்டுக் காட்டியுள்ளது. படத்தில் தி.மு.கவிற்கு எதிராக எதுவும் இல்லை என்று இதன் மூலம் உதயநிதி உறுதிப்படுத்திக் கொண்டார். அதுமட்டும் அல்லாமல், சர்கார் படம் வெற்றி அடைய சன் டிவி, ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் விஜய்க்கும் உதயநிதி வாழ்த்து தெரிவித்துள்ளார். வழக்கமாக ஹீரோவுக்கு முதலில் வாழ்த்து கூறப்படும் நிலையில் உதயநிதி கடைசியாகத்தான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதே போல் வாழ்த்துக்காக பயன்படுத்தியுள்ள புகைப்படத்தில் கூட முருகதாஸ் உடன் இருக்கும் புகைப்படத்தையே உதயநிதி பயன்படுத்தியுள்ளார். விஜய் உடன் இருக்கும் படத்தை பயன்படுத்தவில்லை. ஏற்கனவே விஜயை வைத்து திரைப்படம் எடுக்கும் அளவிற்கு இருவரும் நண்பர்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது.