நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள, சாத்தன் குளம் தந்தை - மகன், கொடூரமாக லாக்கப்பில் தாக்கப்பட்டு மரணடைந்த சம்பவத்திற்கு உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

திமுக இளைஞர் அணி செயலாளரும், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட உதயநிதி ஸ்டாலின் ‘ஆறப்போடுவோம் அமைதியாகிவிடுவார்கள்’ என நினைக்காதீர்கள்... என தமிழக முதலமைச்சரை சமூக வலைத்தளத்தில் டேக் செய்து, மிரட்டல் தொனியில் பதிவிட்டுள்ளார்.

சாத்தான்குளத்தில் ஊரடங்கு நேரத்தில் கூடுதல் நேரத்தில் கடை திறந்து வைத்திருந்ததாகக்கூறி, ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை சாத்தான்குளம் போலீசார் கடுமையாகத் தாக்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. பின்னர் அவர்களை கோவில்பட்டி கிளைச் சிறையில் போலீசார் அடைத்தனர். அங்கு இருவரும் அடுத்தடுத்து மரணமடைந்தனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே, ஜெயராஜ் உடல்நலக் குறைவாலும், அவரது மகன் பென்னிக்ஸ் மூச்சுத்திணறலாலும் இறந்ததாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் தெரிவித்திருந்தார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக இரண்டு காவல் உதவி ஆய்வாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாகவும், 2 தலைமைக் காவலர்கள் மீது அலுவல் ரீதியான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரத்திற்கு பாலிவுட் பிரபலங்கள், கோலிவுட் பிரபலங்கள், பொது மக்கள், மற்றும் விளையாட்டு வீரர்கள் என அனைவரும், மனித நேயம் தமிழகத்திலும் மறைந்து விட்டதா? என கேள்வி எழுப்பி கடுமையாக தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்து வந்தனர்.

அந்த வகையில் நடிகர் உதயநிதி ஸ்டாலின், ‘ஆறப்போடுவோம் அமைதியாகிவிடுவார்கள்’ என நினைக்காதீர்கள் என முதலமைச்சருக்கு டேக் செய்து தன்னுடைய கண்டனத்தை மிரட்டல் தொனியில் வெளிப்படுத்தியுள்ளார். மேலும். அந்த குடும்பத்துக்கு ஆறுதல் அளிக்கும் வகையிலும், தவறிழைக்க நினைப்பவர்களை எச்சரிக்கும் வகையிலும் உங்களின் நடவடிக்கைகள் அமையும் என நம்புகிறோம்! என்றும் கூறியிருந்தார்.

இதை தொடர்ந்து சாத்தான்குளம் ஜெயராஜ்-பென்னிக்ஸ் குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய புகைப்படத்தை வெளியிட்ட உதயநிதி,  ‘அப்பா, தம்பியைப் பற்றி விசாரிங்க சார். ஒருத்தர்கூட தப்பா சொல்லமாட்டாங்க. தம்பி அத்தனை முறை இரத்ததானம் பண்ணியிருக்கான். அவ்வளவு நல்லவன். அவங்களை ஹாஸ்பிடல்ல இருந்து காப்பாத்தினா போதும்னு தவிச்சோம்.

 

 

ஆனா எல்லாமே முடிஞ்சிடுச்சு.’ அவர்கள் சொல்லச்சொல்ல, ‘இப்படியான செயலை மிருகங்கள்கூட செய்யத் துணியாது’ என்று தோன்றியது. கிளம்பும்போது, ‘எங்களுக்கு நீதி வேணும் சார்’ என்றனர். எளிய மனிதர்களின் உறுதியான வார்த்தைகள் அவை. நீதி கிடைக்கக் கழகம் துணை நிற்கும் என பதிவிட்டுள்ளார்.