Asianet News TamilAsianet News Tamil

திமுகவிலும் சாதி பாகுபாடு... பா.இரஞ்சித் குற்றச்சாட்டுக்கு பதறிப்போய் விளக்கம் அளித்த உதயநிதி ஸ்டாலின்

திமுகவிலும் சாதிப் பாகுபாடு இருக்கிறது என பா.இரஞ்சித் கூறியிருந்த நிலையில், அதற்கு விளக்கம் அளித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் டுவிட் போட்டுள்ளார்.

Udhayanidhi Stalin respond to Pa Ranjith about Caste discrimination in DMK
Author
First Published Jul 3, 2023, 3:36 PM IST

மாரி செல்வராஜ் உதயநிதி ஸ்டாலின் கூட்டணியில் வெளியான மாமன்னன் திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில், அப்படத்தை பார்த்த திரைப்பிரபலங்கள் பலரும் பாராட்டி பதிவிட்ட வண்ணம் உள்ளனர். அந்த வகையில் ஒடுக்கப்பட்ட மக்களின் வலிகளை பேசும் படங்களை அதிகளவில் இயக்கி வெற்றிகண்ட இயக்குனர் பா.இரஞ்சித், மாமன்னன் படத்தை பாராட்டி டுவிட்டரில் நீண்ட நெடிய பதிவு ஒன்றை போட்டிருந்தார்.

அந்த பதிவில் திமுகவிலும் சாதிய பாகுபாடு இருக்கிறது என்று பரபரப்பு குற்றச்சாட்டையும் தெரிவித்திருந்தார். பா.இரஞ்சித்தின் இந்த குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளித்து உதயநிதி ஸ்டாலின் பதில் டுவிட் போட்டுள்ளார். அதில், `மாமன்னன்' திரைப்படத்தைப் பாராட்டிய இயக்குநர் சகோதரர் பா.இரஞ்சித் அவர்களுக்கு நன்றி. சாதிய அடக்குமுறைகளும் - ஏற்றத்தாழ்வும் கழகம் மட்டுமல்ல, எந்த கட்சிக்குள் இருந்தாலும் அது அறவே ஒழிக்கப்பட வேண்டும். அனைவருக்குமான சுயமரியாதையை உறுதி செய்ய, தொடர் பரப்புரை செய்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது கழகம்.

இதையும் படியுங்கள்... திமுகவிலும் இன்றுவரை சாதி பாகுபாடு பெரும் சவாலாக இருந்து வருகிறது; பா. ரஞ்சித் டுவீட்!!

Udhayanidhi Stalin respond to Pa Ranjith about Caste discrimination in DMK

ஆட்சி பொறுப்பேற்கும் போதெல்லாம் சட்டங்களாகவும் திட்டங்களாகவும் `சமூகநீதி'யை அரியணை ஏற்றி, அரசியல் தளத்தில் தொடர்ந்து போராடி வருகிறது கழக அரசு. அண்ணா-கலைஞர் வழியில் எங்கள் கழகத் தலைவர் அவர்களும் இப்பணியைத் தொடர்கிறார். `பராசக்தி'யில் தொடங்கி `மாமன்னன்' வரை கலைவடிவங்களிலும் `சமூகநீதி'யைத் தொடர்ந்து உயர்த்திப் பிடித்து வருகிறோம். ஆயிரமாயிரம் ஆண்டு கால சனாதனத்திற்கு எதிராக, சமத்துவம் காண போராடும்  நூறாண்டுகால போராட்டம் இது. இன்னும் முழுமை பெறாத போராட்டமும்கூட. 

ஒரே திரைப்படத்தின் மூலம் சமூகத்தில் தலைகீழ் மாற்றத்தை நிகழ்த்திவிட முடியாது என்பதையும் நாம் அனைவரும் அறிவோம். பெரியார்-அம்பேத்கர் வழியில் மக்களுடன் தொடர்ந்து உரையாடி இம்மாற்றத்தை நிகழ்த்த முடியும். அதைநோக்கி நாம் அனைவரும் ஒன்றிணைந்து பயணிப்போம். இப்பயணத்தில் கழகம் மீதும் என் மீதும் இப்போது நம்பிக்கை கொண்டிருக்கும் சகோதரர் இரஞ்சித் அவர்களுக்கு நன்றி” என குறிப்பிட்டுள்ளார் உதயநிதி ஸ்டாலின்.

இதையும் படியுங்கள்... மாரிக்கு வாரிக் கொடுத்த உதயநிதி... மாமன்னன் படத்துக்காக அவர் வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?

Follow Us:
Download App:
  • android
  • ios