ரஜினியின் அண்ணாத்த படத்தை கைப்பற்றி வெளியிட்ட உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம், தற்போது சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தை வெளியிட உள்ளது.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் மகனாக உதயநிதி, கடந்த 2008-ம் ஆண்டு தமிழ் திரையுலகில் தயாரிப்பாளராக அறிமுகமானார். குறுகிய காலத்தில் விஜய், சூர்யா, கமல் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களை தயாரித்ததன் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராக வலம் வந்த இவர், கடந்த 2012-ம் ஆண்டு ராஜேஷ் இயக்கத்தில் வெளியான ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.

இப்படம் பிளாக்பஸ்டர் வெற்றியடைந்தது. இதையடுத்து இது கதிர்வேலன் காதல், நண்பேண்டா, கெத்து, மனிதன், நிமிர், சைக்கோ என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து அசத்தினார். தற்போது நெஞ்சுக்கு நீதி, கண்ணை நம்பாதே, ஏஞ்சல் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார் உதயநிதி.

இவர் தயாரிப்பது, நடிப்பது மட்டுமின்றி தனது ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் மூலம் படங்களை வெளியிட்டும் வருகிறார். அந்த வகையில், கடந்தாண்டு ரஜினியின் அண்ணாத்த படத்தின் வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய உதயநிதி, தமிழகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியிட்டார்.

இந்நிலையில், தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள எதற்கும் துணிந்தவன் படத்தின் வெளியீட்டு உரிமையையும் உதயநிதி ஸ்டாலின் தான் கைப்பற்றி உள்ளார். இப்படம் வருகிற மார்ச் மாதம் 10-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. அதேபோல் வருகிற ஏப்ரல் மாதம் வெளியாக உள்ள விஜய்யின் பீஸ்ட் படத்தின் வெளியீட்டு உரிமையையும் கைப்பற்ற உதயநிதி முனைப்பு காட்டி வருவதாக கூறப்படுகிறது. மேற்கண்ட 3 படங்களையும் சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.