நடிகை சமந்தா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த யூடர்ன் திரைப்படம் தெலுங்கில் படுதோல்வியை சந்தித்துள்ளதால் சமந்தா அதிர்ச்சியில் உறைந்துள்ளார். கன்னடத்தில் லூசியா என்ற திரைப்படத்தின் மூலம் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தவர் இயக்குனர் பவன் குமார். எது நிஜம் எது கனவு என்பதை கணிக்கவே முடியாத அளவுக்கு குழப்பமான திரைக்கதையை மிகவும் நேர்த்தியாக கையாண்டு கைதட்டல்களை பெற்றவர் பவன்குமார். மிகக் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட லூசியா பல கோடிகளை வாரிக்குவிக்க இந்தப் படத்தை போட்டி போட்டு வாங்கி தமிழில் நடித்து வெளியிட்டார் நடிகர் சித்தார்த். 

எனக்குள் ஒருவன் என்ற பெயரில் இந்த படம் தமிழில் வெளியானது. ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெற இந்த திரைப்படம் தவறி விட்டதாகவே கருதப்படுகிறது. இந்த நிலையில் இதே இயக்குனர் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் இயக்கிய திரைப்படம் தான் யுடர்ன். அலட்சியத்தால் நேரிடும் சாலை விபத்தில் உயிரிழப்பு ஏற்பட அடுத்தடுத்து என்ன நடக்கிறது என்பதை யூகிக்க முடியாத திருப்பங்களுடன் திரைக்கதை அமைக்கப்பட்டு இருந்தது.

 

இதில் நடிகை சமந்தா பத்திரிக்கையாளராக நடித்திருப்பார். நடிகர் ஆதி மற்றும் நடிகை பூமிகா உள்ளிட்டோர் நடித்த இந்த படம் கடந்த மாதம் 13ஆம் தேதி வெளியானது. ரசிகர்களின் கலவையான விமர்சனங்களை பெற்றது யூ டர்ன்.  தெலுங்கில் இந்தப் படத்தை ஒன்பது கோடி ரூபாய்க்கு திரையரங்க விநியோகஸ்தர்கள் வாங்கினர். ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு வசூல் வரவில்லை. நான்காம் நாளில் தான் ஓரளவுக்கு வசூல் வேட்டை ஆரம்பித்த நிலையில் பின்னர் தடைபட்டது. 

இதற்கு காரணம் சமந்தா கணவர் நாகசைதன்யா நடிப்பில் வெளியான சைலஜா ரெட்டி அல்லுடூ என்ற திரைப்படம் தான். வசூலில் இந்தப்படம் பிக்கப் ஆக யூடர்ன் பேக்கப் ஆகிவிட்டது. ஒன்பது கோடி ரூபாய்க்கு விநியோகஸ்தர்கள் படத்தை வாங்கிய நிலையில் ஆறரை கோடி ரூபாய்க்கு மட்டுமே வசூலாகியுள்ளது.