தமிழக சினிமா ஃபைனான்சியர்கள் சிலரின் சதி வலையில் அஜீத்தின் ‘நேர்கொண்ட பார்வை’படத்தயாரிப்பாளர் போனி கபூர் சிக்கியுள்ளதால் வரும் ஆகஸ்ட் 8ம் தேதி அற்விக்கப்பட்டபடி படம் ரிலீஸாகுமா என்கிற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

நடிகை ஸ்ரீதேவியின் கணவரும் இந்திபட தயாரிப்பாளருமான போனிகபூர் தயாரிப்பில் அஜீத் நடித்துள்ள ’நேர்கொண்ட பார்வை’ படத்தை வாங்க விநியோகஸ்தர்கள் முன்வரவில்லை என்று கடந்த சில நாட்களாக தகவல்கள் றெக்கை கட்டி பறக்கின்றது..!இது குறித்து சினிமா வட்டாரத்தில் விசாரித்தபோது, தமிழ்த் திரையுலகை ஆட்டிப்படைக்கும் பவர்ஃபுல் பைனான்சியர்கள் சிலர், இதன் பின்னணியில் மறைந்திருந்து சில சதிவேலைகளில் ஈடுபட்டிருப்பதாகத் தெரிகிறது.

அஜீத்தின் விஸ்வாசம் பட வெற்றியின் மூலம் சத்யஜோதி தியாகராஜனின் கடன்கள் ஈடுசெய்யப்பட்ட நிலையில், பைனான்சியர்களுக்கும் நல்ல லாபம் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. அடுத்து, தமக்குத் தெரிந்த தயாரிப்பாளர்களுக்கு அஜீத் படம் நடித்துக் கொடுப்பார் என்று எதிர்பார்த்துள்ளனர் அந்த பைனான்சியர்கள்..! ஆனால் ஸ்ரீதேவிக்கு அளித்த வாக்குப்படி அவர் போனிகபூருக்கு நேர்கொண்ட பார்வை படத்தை ஒப்புக் கொண்டதால் அந்த பைனான்சியர்களுக்கு அதிர்ச்சி..!

மற்ற தயாரிப்பாளர்களைப் போல, போனிகபூர் பைனான்சியர்களிடம் கடன் வாங்கி படம் தயாரிக்கும் தயாரிப்பாளர் அல்ல, தன்னுடைய பணத்தை போட்டு முழுபடத்தையும் விரைவாக படமாக்கி, வெளியீட்டுக்கும் கொண்டு வந்து விட்டார். இது ஒரு பக்கம் இருக்க, அடுத்த படமும் போனிகபூருக்கே, அஜீத் நடித்து கொடுக்க இருப்பதால், பைனான்சியர்களின் ஆத்திரம் மேலும் அதிகரித்துள்ளது.

இதனால் நேர்கொண்ட பார்வை படத்தை எந்த ஒரு வினியோகஸ்தரையும் வாங்க விடாமல் தடுத்தால், போனிகபூர் தமிழில் இனி படம் தயாரிக்க மாட்டார் அல்லது தாங்கள் கேட்ட குறைந்த விலைக்கு படத்தை விற்பார் என்று நெருக்கடி கொடுத்ததாக கூறப்படுகின்றது.ஆனால், போனிகபூர் ஆகஸ்ட் 8ந்தேதி படம் வெளியிடப்படும் என்று அறிவித்தார். இந்த நிலையில் நண்பன் படத்தை தயாரித்த ஜெமினி பிலிம் சர்க்கியூட் பட நிறுவனத்தின் மனோகர் பிரசாத் என்பவர், நேர் கொண்ட பார்வை படத்தை வெளியிட்டு தருவதாக கூறி போனிகபூரை சந்தித்து 5 கோடி ரூபாய்க்கு காசோலை வழங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஏற்கனவே  பல கோடி ரூபாய் கடனில் தவித்து வரும் ஜெமினி பிலிம் சர்க்கியூட் மனோகர் பிரசாத்திடம், எப்படி அஜீத் படத்தை பெருந்தொகை கொடுத்து வாங்க இயலும் என்ற கேள்வி எழுந்தது.நேர்கொண்ட பார்வை படத்தை வைத்து ஜெமினி பிலிம் சர்க்கியூட்டிடம் இருந்து மொத்தக் கடனையும் வசூல் செய்து விட வேண்டும் என்ற திட்டத்துடன் மனோகர் பிரசாத்துக்கு சில பைனான்சியர்கள் 5 கோடி ரூபாய்க்கு காசோலை கொடுத்து அனுப்பி உள்ளதாகவும், நேர்கொண்ட பார்வை படத்தை மனோகர் பிரசாத் வினியோகிக்கும் பட்சத்தில், அப்படத்திற்கு வசூலாகும் தொகையில் பெரும் பகுதியை தங்கள் கடனுக்கு வசூலித்துக் கொள்ளும் வகையில் பட வெளியீட்டுக்கு முந்தைய நாள் இரவு நெருக்கடி கொடுத்து எழுதி வாங்கிக் கொள்ளலாம் என்று திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. போனி கபூர் இந்த பிரச்சினையிலிருந்து எப்படி வெளியே வரப்போகிறார்? அவரால் சொன்ன தேதிக்கு படத்தை ரிலீஸ் செய்ய முடியுமா?? என்பதே இப்போதைக்கு கோடம்பாக்கத்தின் ஹாட் டாபிக்காக ஓடிக்கொண்டிருக்கிறது.