தயாரிப்பாளர் சங்கத்தில் நடந்த குழப்பங்களைப் பயன்படுத்தி அச்சங்கத்தை தனி அதிகாரி நியமித்து முடக்கியது போல நடிகர் சங்கத்தையும் முடக்கும் பெரும் அதிர்ச்சிகரமான முடிவை தமிழக அரசு எடுத்துள்ளதாகத் தெரிகிறது.அதன் துவக்க அறிகுறியாக தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர், மற்றும் செயலாளர் விஷாலுக்கு பதிவுத் துறை நோட்டீஸ் அனுப்புள்ளது.

நடிகர் சங்கத் தேர்தல் நடந்து முடிந்து மூன்று மாதங்களுக்கு மேலாகியும் இன்னும் வாக்குகள் எண்ணப்படவில்லை. இது தொடர்பான வழக்கு தொடர்ந்து இழுபறியில் இருந்து வரும் நிலையில் வரும் 15-ம் தேதி நிச்சயமாக நடிகர் சங்கத் தேர்தலுக்கான வாக்குகளை எண்ணும் உத்தரவு நீதிமன்றத்தில் இருந்து பிறப்பிக்கப்படும் என்று கடந்த வாரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படி முடிவுகள் அறிவிக்கப்பட்டு விஷால் அணியோ, ஐசரி கணேஷ் அணியோ பதவிக்கு வந்து நடிகர் சங்கம் ஒழுங்காக செயல்படவிருப்பதை அரசு தரப்பு விரும்பவில்லையாம்.

எனவேதான் திடீர் அதிரடியாக நடிகர் சங்கம் சரிவரச் செயல்படவில்லை என்ற புகாரில் நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. அதனால் இந்த நடிகர் சங்கத்துக்கு தனி அதிகாரியை ஏன் நியமிக்கக் கூடாது என்று விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாம். அப்படியே இயக்குநர்கள் சங்கம், சண்டை, நடனக்கலைஞர்கள் சங்கம் உட்பட எல்லா சங்கத்துக்கும் நோட்டீஸ் அனுப்பி அத்தனைக்கும் தனி அதிகாரிகளை நியமிச்சி தமிழ் சினிமாவுக்கே பூட்டு போடுங்க எசமான்...