’பிகில்’பட சர்ச்சைகள் அதிமுகவுக்கும் நடிகர் விஜய்க்குமான நேரடியான மோதலாக மாறியுள்ள நிலையில் அவ்விழா நடத்த அனுமதி கொடுத்த தாம்பரம் சாய்ராம் கல்லூரி நிர்வாகத்துக்கு தமிழக அரசின் உயர் கல்வித்துறை விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது பரபரப்பாகியுள்ளது.

பிரபல நடிகர்களின் ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சிகள் சமீபகாலமாக கல்லூரி வளாகங்களில் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் நடிகர் விஜய்யின் ‘பிகில்’பட ஆடியோ வெளியீட்டு விழா தாம்பரத்தை அடுத்துள்ள சாய்ராம் பொறியியல் கல்லூரியில் கடந்த 19ம் தேதி வியாழனன்று நடைபெற்றது. அவ்விழாவில் வழக்கம்போல் சில அரசியல் பஞ்ச் டயலாக்குகள் பேசிய விஜய், சுபஸ்ரீயின் மரணம் குறித்து அதிமுகவினரை தாக்கிப் பேசியிருந்தார். அடுத்து மக்கள் யாரை எங்கே வைக்கணுமோ அங்கே வைக்கணும் என்றொரு குண்டையும் போட்டார்.

விஜயின் அப்பேச்சுக்கு கடுமையான எதிர்ப்புத் தெரிவித்த அதிமுக அமைச்சர்கள் சிலர், அவர் பட விளம்பரத்துக்காகப் பேசுவதாகவும், அரசியல் குறித்து அவர் கமெண்ட் அடிப்பதே சுய விளம்பரத்துக்காக என்றும் அவசியம் ஏற்பட்டால், தனக்கு ஒரு காரியம் ஆகவேண்டுமென்றால் விஜய் யார் காலில் வேண்டுமானாலும் விழக்கூடியவர் என்று தொடர்ந்து தாக்கிவந்தனர்.

இந்நிலையில் 'பிகில்’ ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு எதன் அடிப்படையில் கல்லூரி அனுமதி கொடுத்தது? என்று கேட்டு சாய்ராம் கல்லூரிக்கு தமிழக அரசின் உயர்கல்வித்துறை செயலாளர் அதிரடியாய் ஒரு நோட்டீஸ் உள்ளதாக ஒரு செய்தி பரவி வருகிறது. ரஜினியின் ‘பேட்ட’படத்துக்கும் இதே கல்லூரியில்தான் ஆடியோ வெளியீட்டு விழா நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.