கொரோனா லாக்டவுன் காலத்தில் பெரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்த மேடை நாடக கலைஞர்களுக்காக தமிழக அரசு அசத்தலான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. நாடக கலைஞர்களின் வாத்தியங்கள், உபகரணங்களை அரசு பேருந்துகளில் இலவசமாக கொண்டு செல்ல அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. அரசு போக்குவரத்து கழக பேருந்துகளில் 50 சதவீத பயண கட்டண சலுகை இயங்கி வரும் நிலையில், தற்போது நாடக கலைகள் தொடர்பான உபகரணங்களை கட்டணமில்லாமல் இலவசமாக பேருந்துகளில் எடுத்து செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்:

அரசு போக்குவரத்து கழக பேருந்துகளில் ஏற்கனவே நாடகம் மற்றும் கிராமிய கலைஞர்களுக்கு 50 சதவீத கட்டண சலுகையுடன் பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேற்படி கலைஞர்கள் தங்கள் வாத்தியக் கருவிகளை அரசு போக்குவரத்து கழக பேருந்துகளில் கட்டணமில்லாமல் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படும். மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் அறிவிப்பினை நடைமுறைப்படுத்தும் பொருட்டு தற்போது நாடக கலைஞர்களுக்கு மட்டும் இணைப்பில் கண்டுள்ள உபகரணங்களை பேருந்துகளில் கட்டணமில்லாமல் இலவசமாக எடுத்து செல்ல அனுமதிக்கும்படி அனைத்து அரசு போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குநர்களையும் அறிவுறுத்தலாமென்று அரசு முடிவு செய்து ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாடக கலைஞர்களுக்கான கலைப்பொருட்கள், இசைக்கருவிகள்:

* ஆடை அணிகலன்கள்
* ஒப்பனை பொருட்கள்
* இசை வாத்திய கருவிகள்
* ஆர்மோனியம்
* தபேலா
* லொடக்
* மிருதங்கம் மற்றும் இதர ஏதேனும் சிறிய அளவிலான இசை கருவிகள் எடுத்து செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.