தற்போது தமிழக அரசு தியேட்டர்களில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 

கொரோனா பிரச்சனை காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டிருந்த தியேட்டர்கள் மூடப்பட்டிருந்த நிலையில், தமிழகத்தில் 50 சதவீத பார்வையாளர்களுடன் கடந்த 15ம் தேதி முதல் திரையரங்குகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும் மக்கள் கூட்டம் கூடுவது குறைவாக காணப்பட்டது. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

தற்போது பொங்கல் விருந்தாக விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் ஜனவரி 13ம் தேதி வெளியாக உள்ள நிலையில், தியேட்டர்களில் 100 சதவீத பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டுமென தமிழக அரசுக்கு கோரிக்கைகள் வைக்கப்பட்டது. கடந்த வாரம் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை ரகசியமாக சந்தித்த நடிகர் விஜய், திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். 

தமிழகத்தில் மீண்டும் ஜனவரி 31ம் தேதி வரை ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ள நிலையில், தியேட்டர்களில் 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இதனால் விஜய்யின் கோரிக்கையை முதலமைச்சர் நிராகரித்து விட்டதாக கூறப்பட்டது. ஆனால் 100 சதவீத பார்வையாளர்கள் குறித்து தனி அறிவிப்பு வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகின.

தற்போது தமிழக அரசு தியேட்டர்களில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தியேட்டர்களில் 50 சதவீத பார்வையாளர்களில் இருந்து 100 சதவீத பார்வையாளர்களை அனுமதிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஜய்யின் மாஸ்டர், சிம்புவின் ஈஸ்வரன் திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக தியேட்டர்களுக்கு விதிக்கப்பட்ட கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றவும் உத்தரவிடப்பட்டுள்ளது.