17 ஆண்டுகளாக முன்னணி ஹீரோயினாக 5 மொழிப் படங்களில் நடித்து இன்றளவுக்கும் ஹாட் நடிகையாக நீடிக்கும் திரிஷாவுக்கு இன்று 37 வது பிறந்த நாள். தனது பிறந்த நாளை அவர் பாங்காக்கில் கொண்டாடி வருகிறார்.

’99ல் வெளிவந்த சிம்ரன், பிரசாந்தின் ‘ஜோடி’ படத்தில் ரிச் கேர்ளாக ஒரு சில நொடிகள் மட்டுமே தோன்றி மறைந்த த்ரிஷாவின் முதல் படம் அமீர் இயக்கத்தில் வெளிவந்த ‘மவுனம் பேசியதே’. அந்த எண்ட்ரியில் தொடங்கி ரஜினியுடன் ஜோடி சேர்ந்த ‘பேட்ட’ வரை த்ரிஷா ஸ்டெடியான மார்கெட்டுடன் நிலைத்து நின்று 70 படங்களுக்கும் நடித்து முடித்திருக்கிறார். இதில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்திப் படங்களும் அடக்கம். அவர் நடித்த ஒரே இந்திப்படம் ’கட்டா மீத்தா’.பிரியதர்ஷன் இயக்கியது.

இந்த 37 வது வயதிலும் திரிஷா பிசி நடிகைதான். கைவசம் ‘கர்ஜனை’,’சதுரங்க வேட்டை 2’,’1818’,’பரமபதம் விளையாட்டு’,’ராங்கி’ ஆகிய 5 படங்கள் கைவசம் வைத்திருக்கிறார். ‘பரமபதம் விளையாட்டு’ படத்தின் ட்ரெயிலர் அவரது பிறந்தநாளை ஒட்டி இன்று ரிலீஸாகிறது.

தமிழில் நயன்தாராவுக்கு அடுத்தபடியாக திரிஷா அளவுக்குக் கிசுகிசுக்கப்பட்ட நடிகை வேறு யாரும் இல்லை என்று சொல்லுமளவுக்கு இந்த 20 ஆண்டுகளில் திரிஷா குறித்து லட்சத்துச் சொச்சம் கிசுகிசுக்கள் வந்திருக்கலாம். அவற்றை ஒரு ஓரமாக நின்று வேடிக்கை பார்த்துவிட்டு தனது சினிமா பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார்.

தமிழ் சினிமாவில் கதாநாயகர்கள் வயதான பிறகும் இளம் நாயகிகளுடன் ஜோடி சேருவதுபோல் தனது 50 வது வயதிலும் அடுத்து அறிமுகவாகவிருக்கும் இளம் ஹீரோக்களுடன் திரிஷா டூயட் பாடினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. அதனால் திரிஷாவுக்கு ரிடையர்மெண்ட் என்ற பேச்சுக்கே இடமில்லை.