தமிழக அரசு போக்குவரத்துத்துறையில் இருக்கும் அத்தனை அவலங்களையும் துகிலுரிக்கும் படமாக உருவாகியிருக்கும் ‘தோழர் வெங்கடேசன்’ இதுவரை தமிழ் சினிமா காணாத ஒரு புதுக் கதை கருவை கையில் எடுத்துள்ளது. இப்படத்தை இயக்குநர் சுசீந்திரன் தயாரித்து வெளியிடுகிறார்.

காலா பிலிம்ஸ் பிரைவேட் லிமிடேட் நிறுவனம் சார்பில் மாதவி அரிசங்கர் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் மகாசிவன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘தோழர் வெங்கடேசன்’. அறிமுக நடிகர் அரிசங்கர் ஹீரோவாகவும், மோனிகா சின்னகொட்லா ஹீரோயினாகவும் நடித்திருக்கிறார்கள். சகிஷ்னா இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு வேதா செல்வம் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். 

 எளிய, நடுத்தர வர்க்க குடும்பத்தை சேர்ந்த இளைஞர் ஒருவருடைய வாழ்வில், ஒரு விபத்து, அதோடு தொடர்புடைய சட்ட சிக்கல்கள், எந்தவித தாக்கங்களையும், வலிகளையும், வேதனைகளையும், பின்னடைவுகளையும் ஏற்படுத்துகிறது என்பதை சொல்லும் ‘தோழர் வெங்கடேசன்’ அரசு போக்குவரத்து துறையில் இருக்கும் அவலங்களையும் சுட்டி காட்டி, சமூகத்தில் அதிர்வை ஏற்படுத்தும் விதமாக உருவாகியுள்ளதால், இப்படத்திற்காக சமூக ஆர்வலர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள். இப்படத்தின் முக்கிய சுவாரசியமே விபத்து ஏற்படுத்திய பஸ்ஸையே கோர்ட் ஹீரோவுக்கு வழங்கிவிட அதை வைத்துக்கொண்டு அவர் என்ன பாடுபடுகிறார் என்கிற கதைக்கரு.

 காட்சிகள் எதார்த்தமாக இருக்க வேண்டும் என்பதற்காக காட்சிகளை ஒரிஜினலாக படமாக்கியிருக்கும் இப்படக்குழுவினர், சமீபத்தில் நடைபெற்ற மயான கொள்ளை திருவிழாவில் நாயகனும், நாயகியும் பங்கேற்ற காட்சிகளை  பல கோணங்களில் ட்ரான் தொழிட்நுட்பத்துடன் படமாக்கியுள்ளனர். அதேபோல், திருப்புமுனை கிராபிக்ஸ் காட்சியை மோஷன் கண்ட்ரோல் காமிரா உதவியுடன் படமாக்கியிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.