ஜல்லிக்கட்டு போராட்ட களத்தில் விநியோகம் செய்யப்பட்ட சாப்பாடு பார்சலில் காண்டம் இருந்ததாக விசிக தலைவர் திருமாவளவன் பேசியிருப்பது சர்ச்சையாகியுள்ளது.

சென்னையில் நேற்று முன்தினம் மெரினா புரட்சி எனும் திரைப்படத்தின் விழா நடைபெற்றது. மெரினாவில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டம் தொடர்ந்து தமிழகம் முழுவதும் அந்த போராட்டம் பரவியது மற்றும் இறுதியில் ஜல்லிக்கட்டு நடத்த கிடைத்த அனுமதி ஆகியவற்றை மையமாக வைத்து இந்த திரைப்படத்தை இயக்கியுள்ளனர். எனவே தான் இந்த படத்திற்கு மெரினா புரட்சி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இப்பட விழா சென்னையில் உள்ள வடபழனியில் நடைபெற்றது. விழாவில் திருமாவளவன் கலந்து கொண்டு பேசினார். அத்திவரதர், சம கால அரசியல் உள்ளிட்டவற்றை திருமாவளவன் பேசிய நிலையிலும் அவர் ஜல்லிக்கட்டு குறித்து பேசிய பேச்சு தான் பார்வையாளர்களை கவனிக்க வைத்தது அது தற்போது விவாதப் பொருள் ஆகியுள்ளது.

மெரினா போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போதே போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள், இளம் பெண்கள் குறித்து தவறான கருத்துகள் பரப்பப்பட்டன. இரவு நேரத்தில் போராட்ட களத்திலேயே பெண்களும் ஆண்களும் தவறான செயல்களில் ஈடுபட்டதாக சொல்லப்பட்டது. மேலும் போராட்டம் முடிந்து அனைவரும் சென்ற நிலையில் மெரினாவில் படகு ஓர மறைவுகளில் நிறைய காண்டம்கள் கிடைத்ததாகவும் வதந்தி பரவியது.

இந்த நிலையில் சென்னை விழாவில் பேசிய திருமாவளவன் ஒரு தகவலை வெளியிட்டார். அதாவது ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களுக்கு தினமும் பல்வேறு நிறுவனங்களும், கார்ப்பரேட் கம்பெனிகளும் உணவு பார்சல் கொண்டு வந்து கொடுத்ததாகவும், அப்படி கொடுக்கப்பட்ட பார்சல்களுக்குள் காண்டம் இருந்ததாகவும் இளைஞர்கள் சிலர் கூறியதாக திருமாவளவன் குறிப்பிட்டார்.

இந்த விவகாரம் மெரினா புரட்சி படத்தை எடுத்தவர்களுக்கு தெரியுமா என்பது எனக்கு தெரியாது ஆனால் என்னிடம் சிலர் இதனை கூறினர். மேலும் தங்கள் போராட்டத்தை கொச்சைப்படுத்த சிலர் இவ்வாறு செய்ததாக இளைஞர்கள் வருத்தப்பட்டதாகவும் திருமா கூறினார். ஆனால் யார் அவ்வாறு கூறியது என திருமா குறிப்பிடவில்லை. உணவுப் பார்சல்களில் காண்டம் இருந்தது என்றால் அதனை ஓபன் செய்த மறுநிமிடமே கொடுத்த நபரிடம் கேட்டிருக்கலாம் அல்லவா என்கிற கேள்விக்கு பதில் இல்லை.