this is the story of annathurai

விஜய் ஆண்டனி நடித்த அண்ணாதுரை படத்தின் விமர்சனம் 

தன்னால் தடம்புரளும் தன் குடும்பத்தின் மகிழ்ச்சியைத் தன் உயிரைத் தியாகம் செய்து மீட்கும் தலைமகன் அண்ணாத்துரை யின் கதை.

அந்த இரவோடு குடியை விடுத்து, புத்தம்புது நாளுக்கு உத்திரவாதம் கொடுக்கிறார் அண்ணாத்துரை. விதி, வேறு ஒரு திரைக்கதையை எழுதியிருந்தால் அதை மாற்ற யாரால் முடியும்..?

ஒருவேளை, காதல் தோல்வி தவிர வேறு எந்தக் கள்ளமும் இல்லாத அண்ணனை, “ நாளைக்கு தம்பித்துரையாகப் போய் என் மனைவி கூட படுக்க மாட்டான்னு என்ன நிச்சயம்..?” என்று கேட்டுப் புண்படுத்திய தம்பித்துரை, அடுத்த சில வருடங்களுக்கு அல்லல் பட வேண்டும் என்கிற இயற்கையின் நியதியா..?

இதுவரை, சலீம், எமன், சைத்தான் என்று ஒரு மாதிரி இருட்டு உலகத்தில் பயணித்ததன் விளைவோ என்னவோ தெரியவில்லை, விஜய் ஆண்டனியை அன்பான குடும்பத்தினருடன் பார்த்த மகிழக் கொஞ்சம் நேரம் எடுக்கத்தான் செய்வார்கள், ரசிகர்கள்.

மற்றபடி, எனக்குள்ள ஒரு விஜயசேதுபதியும் இருக்கான்டா என்று களமிறங்கிக் கலக்கியிருக்க வேண்டிய கதைக்களம்.

கிளைமாக்ஸில் , அந்தப் பள்ளிக்கூட வகுப்பறையில் வைத்து வீடியோ வெளியிடுவதும் , மகிமாவுடன் நடக்கும் உரையாடல்களும் வேற லெவலில் இருந்திருக்க வேண்டும்.

எஸ்தரைப் பறிகொடுத்த அண்ணாத்துரை வழக்கமான விஜய் ஆண்டனிதான் என்றாலும், பி.டி மாஸ்டராக வரும் தம்பித்துரை விஜய் ஆண்டனி, அம்மாவுக்குத் தோசை சுட்டுக் கொடுப்பதில் இருந்து, டயானா சம்பிகாவுடனான காதல் என்று கவனத்தைக் கவர்கிறார், இதுவரை பார்த்திராத விஜய் ஆண்டனி.

மூன்று நாயகிகளிலும் , கோதண்டன் மகள் ரேவதியாக வரும் டயானா, ஸ்கோர் செய்கிறார். இவளை ஏன்டா ஏழு வருஷம் காக்க வைக்கிறாய்ங்க என்று ஆதங்கப்படும் குழந்தைத்தனமான அழகு.

அது என்ன கோதண்டம் மகள்..? அட, மாமனாராக வாழ்ந்திருக்கார்யா மனுஷன், செந்தில்குமரன்.

நளினிகாந்த், ராதாரவி, சேரன் ராஜ், காளிவெங்கட், ராமச்சந்திரன், டேவிட், ரிந்துரவி என்று நட்சத்திரப்பட்டாளமே இருக்கிறார்கள்.

ஒவ்வொருத்தருக்கும் கொடுக்கப்பட்டிருக்கும் வசனங்கள், அவர்கள் கதாபாத்திரங்களைத் தூக்கி நிறுத்துகிறது. நீங்களும் தானே எனக்கு மாப்பிள்ளை என்று கோதண்டம் பேசும் பாச வசனங்களாகட்டும், செஞ்சுருவேன் செஞ்சுருவேன்னு நீ பேசிக்கிட்டே இருப்ப, நான் செஞ்சிட்டுத்தான் பேசுவேன் என்று விஜய் ஆண்டனி பேசும் பஞ்ச் வசனமாகட்டும், வசனகர்த்தாவாக ஸ்ரீனிவாசன், பாராட்டுகளைப் பெறுகிறார்.

திருக்கோவிலூர் நகரத்தில் நடக்கும் சண்டைக் காட்சிகள், துரத்தல்கள் யதார்த்தம், மிரட்டவும் செய்திருக்கிறார், இராஜசேகர்.

அருண்பாரதியின் அத்துனை பாடல்களும் அருமை. தங்கமா வைரமா… ஈ.எம்.ஐயாக வந்து… ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கின்றன, விளையாடியிருக்கிறார் விஜய் ஆண்டனி, இசையமைப்பாளராக.

சண்டைக்காட்சிகளும் வன்முறைகளும் இருந்தாலும், குடும்பப்படம் போன்றே முழுப்படத்தையும் காட்சிப் படுத்தியிருக்கிறார்கள் ஒளிப்பதிவாளர் தில்ராஜும், இயக்குநர் ஸ்ரீனிவாசனும்.

இங்கேதானடா பிரமிட் இருந்துச்சுன்னு ஆலம்பரா கோட்டையில் போய்த்தேடப் போறாய்ங்க, அந்த கிராபிக்ஸ் பாடல் கலக்கல் ரகம்.

ஹீரோவோட அப்பன் யாரு..? அம்மா யாரு..? அவனுக்கு எந்த ஊரு..? என்பது கூடத்தெரியாமல் கதாபாத்திரப் பற்றாக்குறையுடன் படங்கள் வந்துகொண்டிருக்கும் கால கட்டத்தில், அம்மா, அப்பா, அண்ணன் - தம்பி, மாமா, மாமா பொண்ணு, நண்பன் என்று உறவுகள் வலைவிரித்து ரசிகர்களைச் சிக்க வைத்திருக்கிறார் அறிமுக இயக்குநர் ஜி.ஸ்ரீனிவாசன்.

உறவுகள் நிறைந்த தொலைக்காட்சித் தொடர்களுக்குள் சுழன்று வந்துகொண்டிருக்கும் தயாரிப்பாளர் ராதிகா சரத்குமாருக்கு இந்தக் கதை பிடித்துப் போனதில் ஆச்சிரியமில்லைதான்.

விஜய் ஆண்டனி, ஒரு பத்து நாள் ஹோம் வொர்க் செய்திருந்தார் என்றால் , இந்தப்படம் பிச்சைக்காரனை விடப் பெரிய வெற்றிப் படமாக அமைந்திருக்கும்!