1994ம் ஆண்டு வெளியான ’1942 எ லவ் ஸ்டோரி’ படத்தில் இடம் பெற்ற ஏக் லடுக்கி கோ தேகா தோ ஐஸா லகா என்ற சூப்பர் ஹிட் பாடல் வரிகளைக் கொண்ட நீளமான தலைப்பில் ஒரு படம் தயாராகியிருக்கிறது.

முந்தைய படத்தில் அனில்கபூர் நடித்திருக்க தற்போதைய படத்தில் ஹீரோயினாக அவர் மகள் சோனம் கபூர் நடித்திருக்கிறார். நேற்று ட்ரெயிலர் வெளியிடப்பட்டது வரை ரகசியமாக வைக்கப்பட்டிருந்த இப்படம் தொடர்பான இரண்டு தகவல்கள் தற்போது லீக்காகி வைரலாகி வருகின்றன.

இப்படம் குறித்து ரகசியம் காத்துவந்த சோனம் ‘இது ஒரு வித்தியாசமான காதல் கதை’ என்று மட்டுமே சொல்லி வந்தார். அந்த வித்தியாசம் என்பது லெஸ்பியன் காதல் என்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அதே போல் சோனம் கபூரின் காதலியாக நடித்தவரும் நேற்றுவரை ரகசியமாக வைக்கப்பட்டிருந்தார்.

தற்போது அவருடைய பெயரும் லீக்காகியுள்ளது. அவர் ’கேடி பில்லா கில்லாடி ரங்கா’ முதல் கடந்த வாரம் ரிலீஸான ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’ வரை சுமார் பதினைந்துக்கும் மேற்பட்ட தமிழ்ப்படங்களில் நடித்திருக்கும் ரெஜினா. ஆனால் படம் ரிலீஸாகும் வரை யாருக்கும் பேட்டி தரக்கூடாது என்று தயாரிப்பாளர் தரப்பில் கெடுபிடி இருப்பதால் ரெஜினா பத்திரிகையாளர்களிடம் பேச மறுக்கிறார்.