அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் மூன்றோடு ஆவின் பாலும் சேர்கிறது என குஷியாக இருக்கிறார் நடிகை கஸ்தூரி..!

ஆவின் பால் பாக்கெட்டுகளில் திருவள்ளுவர் படத்தை அச்சடிப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார். முன்னதாக, ஆவின் பால் பாக்கெட்டுகளில் திருக்குறள் அச்சடிக்கப்படும் என ஏற்கனவே கூறியிருந்தார்.  

இதுகுறித்து வரவேற்பு தெரிவித்துள்ள நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘’அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் மூன்றோடு ஆவின் பாலும் சேர்கிறது. நல்ல விஷயம்தானே? காலைப்பொழுது  திருக்குறளோடு துவங்கும்.  டிவி , எஃப்.எம் ரேடியோவில்  தினம் ஒரு குறள் சொல்கிறார்களே. கோலம், குறள், காபி என்று வழக்கப்படுத்திக் கொள்ளலாம்.

 

பால் கவர் குப்பைக்கு போகுமே என்று யோசிப்பதெல்லாம் ஓவர். குறள் எழுதும் பயிற்சி தாளும், ஏன் திருக்குறள் புத்தகமே கூட எடைக்கு போகிறது. நானெல்லாம் பள்ளியில் தமிழ் படிக்கவில்லை. பஸ்ஸில் தான்  திருக்குறள் படித்து கற்றுக்கொண்டேன். தினம்தோறும் வீடு தேடி  குறள் வருவது நல்ல விஷயம்தான்’’எனத் தெவித்துள்ளார்.

அதற்கு கருத்துத் தெரிவித்துள்ள நெட்டிசன் ஒருவர், ‘’இனி கோயில்களில் தேவாரம், திருவாசகம், ஸுப்ரபாதம் பதிலாக திருக்குறள் பாடப்பெற்றால் அடியேன் மனம் ஆவின் பால் போன்று மகிழ்ச்சிபொங்கும்’’எனத் தெரிவித்துள்ளார்.