தன் படம் குறித்து அதிகம் பேச விரும்பாத இயகுநரான தியாகராஜன் குமாரராஜா, ‘சூப்பர் டீலக்ஸ்’ல் நடிகை சமந்தாவின் நடிப்பு குறித்து சிலாகித்திருக்கிறார்.

‘இப்படிப்பட்ட துணிச்சலான பாத்திரத்தில் சமந்தாவைத்தவிர யாரும் நடிக்கமுடியாது. சமந்தா இடம்பெறும் காட்சியில்தான் படம் தொடங்குகிறது.அக்காட்சியில் நடிப்பதற்கு மிகவும் துணிச்சல் வேண்டும் கொஞ்சமும் முகம் சுளிக்காமல் அந்தக் காட்சியை சமந்தா நடித்துக்கொடுத்தார்.

இப்படத்தின் கதையை வழக்கமான சினிமா கதைபோல் ஓரிரு வரிகளில் கூறிவிட முடியாது. ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத 13 கதாபாத்திரங்கள் ஒரே புள்ளியில் இணைவதுதான் படத்தின் கரு.

ஒருவரது வாழ்க்கை, அவர்களுக்கு சம்பந்தமே இல்லாத மற்றவர்களை எப்படிப் பாதிக்கிறது என்பதே ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தின் கதை. இது பார்க்கிற ஒவ்வொருவருக்கும் ஒருவித அனுபவத்தைக்கொடுக்கும். இப்படம் ஆந்தாலஜி வகையைச் சேர்ந்தது என்றெல்லாம் கற்பனைச் செய்திகள் வருகின்றன. அதில் உண்மை இல்லை. ஒரே கதைதான். சில மணி நேரங்களில் நடந்துமுடியும் கதை.

இப்படம் வெளியானவுடன் தென்னிந்திய நடிகை என்கிற வட்டத்தைத் தாண்டி இந்திய அளவில் முக்கியமான நடிகை என்ற இடத்தை சமந்தா பிடிப்பார்’ என்கிறார் அதிகம் பேசாத தியாகராஜன் குமாரராஜா.