There is nothing wrong with greed - actor Thumu advised to school teachers ...
பேராசைப்படுவதிலும், கனவு காணுவதிலும் தவறில்லை என்று பள்ளி ஆசிரிய, ஆசிரியைகளுக்கு நடிகரும், மனோதத்துவ நிபுணருமான தாமு அறிவுரை வழங்கினார்.
திருவண்ணாமலை மாவட்ட பள்ளி ஆசிரியர், ஆசிரியைகளுக்கான ஆற்றலூட்டும் முகாம் மற்றும் புத்தாக்கப் பயிற்சி முகாம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் மாவட்ட கல்வித் துறை சார்பில் நடத்தப்பட்டு வருகிறது.
முகாமின் 4-வது நாளான நேற்று நடைபெற்ற முகாமில் மாவட்டம் முழுவதும் இருந்து 346 கணித பட்டதாரி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
முகாமைத் தொடக்கி வைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெ.ஜெயக்குமார் பேசினார். தொடர்ந்து, ஆசிரியர், ஆசிரியைகளுக்கு பயிற்சி அளித்து நடிகரும், மனோதத்துவ நிபுணருமான தாமு பேசியது:
"நினைப்புத்தான் பிழைப்பைக் கெடுக்கும் என்ற நிலையை மாற்ற வேண்டும். நினைப்புத்தான் பிழைப்பைக் கொடுக்கும் என்பதை ஆசிரியர், ஆசிரியைகளாகிய நீங்கள் நிரூபிக்க வேண்டும்.
நூறு சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற வேண்டும் என்பது நீங்கள் நினைத்தால் மட்டுமே முடியும்.
பேராசை பெருநஷ்டம் என்று கூறி பல பேர் தனக்குத்தானே சூனியம் வைத்துக் கொள்வார்கள். திரைத் துறையில் இசையமைப்பாளராக வேண்டும் என்று திலீப் என்ற சிறுவனுக்கு ஆசை. அந்தச் சிறுவனை நானும், என் நண்பர்களும் சேர்ந்து இசையமைப்பாளர் இளையராஜாவிடம் அழைத்துச் சென்றுவிட்டோம். சிறுவனின் திறமையைப் பார்த்த அவர் மிகவும் வியந்து பாராட்டினார்.
அப்போது, என்னுடைய தாயாரின் ஆசைப்படி நான் இந்த உலகமே பாராட்டும் வகையில் சிறந்த இசையமைப்பாளராக உருவாக வேண்டும் என்று கூறி பேராசைப்பட்டார் அந்தச் சிறுவன். அவரது பெயரை திலீப் என்பதற்குப் பதிலாக ஏ.ஆர்.ரஹ்மான் என்று இயக்குநர் பாலச்சந்தர் மாற்றினார்.
பிற்காலத்தில் இந்த உலகமே திரும்பிப் பார்க்கும் வகையில், பல வெற்றிகளைக் கண்டார் ஏ.ஆர்.ரஹ்மான். எனவே, பேராசைப்படுவதிலும், கனவு காணுவதிலும் தவறில்லை" என்று அவர் தெரிவித்தார்.
இந்த பயிற்சி முகாமில் கல்வித் துறை அதிகாரிகள், ஆசிரியர், ஆசிரியைகள் பலர் பங்கேற்றனர்.
