திரையரங்குகள் எப்போது திறக்கப்படும் என திரையரங்க உரிமையாளர்கள் மட்டும் இன்றி, பல ரசிகர்களும் காத்திருந்த நிலையில், மனதில் பாலை வார்த்தது போல், வெளியாகியுள்ளது தமிழக அரசின் அறிவிப்பு.

கொரோனா பிரச்சனையால்  திரைத்துறை கடுமையான பாதிப்புகளை சந்தித்தது. திறக்கபடாத தியேட்டர்கள், முழுவதுமாக முடிந்த பிறகும் திரைக்கு வர முடியாத திரைப்படங்கள், பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படப்பிடிப்பு என பல பிரச்சனைகள் சுழட்டி அடித்தது. கடன் வாங்கி படம் எடுத்த தயாரிப்பாளர்கள் பலரும் கொஞ்சமாவது சம்பளத்தை குறைத்துக்கொள்ளுங்கள் என டாப் ஹீரோ, ஹீரோயினுக்கு கோரிக்கை வைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.

மறுபுறமே தியேட்டர் உரிமையாளர்களின் நிலை மிகவும் மோசமான நிலைக்கு சென்றுள்ளது. அதாவது தியேட்டர்களை நம்பி பிழைத்து வரும் 10 லட்சம் குடும்பங்களை எப்படியாவது காப்பாற்றுங்கள் என முதலமைச்சரிடம் கதறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 

கடந்த மார்ச் மாதம் முதல் திரையரங்குகள் திறக்க படாததால்... பொன்மகள் வந்தாள், பெண் குயின், உள்ளிட்ட பல படங்கள் ஓடிடியில் வெளியானது. மேலும்  பல படங்கள் ஆன்லைனில் வெளியாக உள்ள நிலையில், தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோவான சூர்யாவின் சூரரைப் போற்று திரைப்படம் ஆன்லைன் தளத்தில் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது தியேட்டர் உரிமையாளர்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. 

இந்நிலையில், கடந்த சில மாதங்களாகவே அதிகப்படியான தளர்வுகளை அறிவித்து வரும் தமிழக அரசு தற்போது, வெளியிட்டுள்ள தகவலில், நவம்பர் 30 ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு முறையை அறிவித்துள்ளது. முக்கியமாக, திரையரங்கு உரிமையாளர்களின் கோரிக்கையை கருத்தில் கொண்டு, நவம்பர் 10 ஆம் தேதி முதல், 50 சதவீத பார்வையாளர்களுடன் திரையரங்குகள் இயக்க தமிழக அரசு அனுமதி கொடுத்துள்ளது.

எனவே இந்த வருட தீபாவளியை, உரிய பாதுகாப்புடன்... திரையரங்கில் தங்களுக்கு பிடித்த படங்களுடன் இரட்டை தீபாவளியாக கொண்டாட பல ரசிகர்கள் தயாராகி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.