இந்த தேசத்தில் சாமான்யர்களுக்கு தலைவர்கள் பாடம் எடுத்த கதையெல்லாம் மலையேறிப்போச்சு. இப்போது தகப்பனுக்கு பாடம் சொல்லும் பிள்ளையாக மாறிவிட்டான் சாதாரண சிட்டிசன். ’வேல வெட்டி இல்லாத பயலுக’ எனும் கெட்ட பெயரை சம்பாதித்து வைத்திருக்கும் நெட்டிசன்கள், நாங்க worst இல்லடா best! என நிரூபிக்கும் தருணத்தை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் சமீபத்தில் இந்த நாட்டை சேர்ந்த இரண்டு எதிரெதிர் துருவங்கள் மரித்துப் போக, அதற்கு ரியாக்ட் செய்த விஷயத்தில் ஸ்கோர் செய்திருக்கிறான் சாமான்யன். ரன் அவுட் ஆகிக் கிடக்கிறது தலைவர்கள் டீம்.  

மதுவில் மரித்த ஸ்ரீதேவி:

வழக்கமாக ஞாயிறுகளில் சோம்பலாக கண் முழிக்கும் இந்திய தேசம் அன்று சோகத்துடன் கண் விழித்தது. காரணம், மெகா நடிகை ஸ்ரீதேவி இறந்துவிட்டார்! என்கிற சேதிதான். எல்லோருக்கும் ஷாக், எக்கச்சக்க ஷாக். சாமான்யன் கூட ‘மயிலு பறந்துட்டியா அதுக்குள்ளே!’ என்று ஒரு கப் காஃபியுடன் பீலிங்கில் உட்கார்ந்தபடி மெல்ல அடுத்த சேதிக்குள் நுழைந்தான். 

ஆனால் இந்த தேசத்தின் தலைவர்களோ ஸ்ரீதேவிக்காக இரங்கல் தெரிவிப்பதில் போட்டோ போட்டி போட்டார்கள். 

இந்த தேசத்தின் ஜனாதிபதியில் துவங்கி, பிரதமர், தமிழகத்தின் இரு முதல்வர்கள், அமைச்சர் பெருமக்கள், எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் என்று ஆளாளுக்கு கண்ணீர் விடாத குறையாக உருகி மருகினார்கள். கட்சி பேதமில்லாமல் இப்படி தலைவர்கள் கதறுவதைப் பார்த்து சாமான்யனுக்கு பெரிய சந்தேகம், ‘அம்மாம் பெரிய அப்பாடக்கரா ஸ்ரீதேவி?’ என்று.
அதே சாமான்யன் உலகத்தில் ஸ்ரீதேவியின் மரணம் அப்படியொன்றும் பெரிய பாதிப்பினை ஏற்படுத்தவில்லை. அதிகபட்சமாக மொபைல் டி.பி.யில் அந்த நடிகையின் படத்தை வைத்தவன், ‘சப்பாணியும், பரட்டையும் கட்சி துவக்குறதை பார்க்க சகிக்காம பறந்துட்டியா மயிலு!?’ என்று மீம்ஸ்களை ஷேர் செய்து தன் அஞ்சலியை சுருக்கிக் கொண்டான். 

ஆனால் அதே நேரத்தில் அவனது கவனம் கேரளா பக்கமிருந்தது. என்ன அங்கே?!
அரிசிக்கு ஆயுசை இழந்த மது:

கேரள மாநிலத்தில் நடந்த அந்த குரூர கொலை இந்தியாவை தெரிந்த சர்வதேசவாதிகளின் மனசாட்சியை உலுக்கியது. அந்த மாநிலத்தின் அட்டப்பாடி பகுதியை சேர்தவர் மது. முப்பது வயதை தொட்ட மனநிலை சரியில்லாத மனிதர். வன பிரதேசமான அட்டப்பாடியில் சில குகைகளில் வாழ்ந்து வந்திருக்கிறார். பசித்தால் மட்டும் குகையை விட்டு வந்து ரோட்டில் யாரிடமாவது எதையாவது வாங்கி தின்பாராம். மனநிலை பாதிக்கப்பட்ட இவரை ‘கோட்டி, பிராந்து’ என்று கிண்டலடிப்பார்களாம்  அந்த ஊர் இளைஞர்கள். 

இந்த நிலையில் அட்டப்பாடி டவுனில் பல வீடுகளில் உணவு பொருட்கள் திருடு போயிருக்கின்றது. ஒரு வீட்டில் நுழைந்துவிட்டு வெளியேறிய திருடனின் உருவம் சிசிடிவியில் பதிவாகி இருந்தது. அந்த உருவமும், மன நிலை சரியில்லாத மதுவின் உருவமும் ஒரே மாதிரி இருந்ததாம். இதனால் ஊர் இளைஞர்கள், நடுத்தர வயதுக்காரர்கள் சுமார் இருபது பேர் சேர்ந்து மதுவை மடக்கிப் பிடித்திருக்கின்றனர். அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லுமளவுக்கு மதுவுக்கு மூளை ஒத்துழைக்கவில்லை. கேட்ட கேள்விக்கெல்லாம் மது சிரிக்க, இந்த டீமோ கடுப்பாகியிருக்கிறது. 

ஆளாளுக்கு கட்டை மற்றும் கையால் மதுவை தாக்க, சிலரோ அதை செல்பி மற்றும் வீடியோ எடுத்திருக்கின்றனர். அடித்து நொறுக்கியபிறகு மதுவை போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்திருக்கின்றனர். மதுவின் மயக்க நிலையை பார்த்து அவரை ஆஸ்பத்திரிக்கு அள்ளிச்சென்றது போலீஸ். ஆனால் பாதி வழியிலேயே மது செத்துவிட்டார். 

ஆனால் மதுவை அடித்து நொறுக்கியதை வீடியோ எடுத்தவர்களில் சிலர் அதை வாட்ஸப் மற்று, ஃபேஸ்புக்கில் போட சர்வதேசமெங்கும் வைரலானது. கேரள முதல்வர் விஜயன் மற்றும் நிதியமைச்சர் ஐசக் போன்றோர் இந்த வன்முறைக்கு எதிராக கொதித்து எழுந்தனர். மதுவை தாக்கியதில் சுமார் 18 பேர் கைது செய்யப்பட்டனர். பிரேதசபரிசோதனை அறிக்கையில் ‘மதுவின் எலும்புகள் நொறுக்கப்பட்டுள்ளன. உடலுக்குள் ஏற்பட்ட கடும் ரத்தப்போக்கினால் மரித்துள்ளார்.’ என்று குறிப்பிடப்பட்டது. 

ஒரு ஆதிவாசி , மனநிலை சரியில்லாத, குழந்தை போன்ற மனிதனை இப்படி குரூரமாக ஒரு கும்பல் அடித்து தாக்கியதை இணையத்தில் கண்ட சாதாரண மனிதன் எவனும் பொங்கி எழுந்தான். ஆனால் மதுவின் குரூர இறப்புக்கு கேரளாவின் முதல்வர் தாண்டி யாரும் வருத்தம் காட்டவில்லை. 

சரக்கடித்துவிட்டு தண்ணீரில் விழுந்து இறந்த ஸ்ரீதேவிக்காக கண்ணீர்விட்ட தேச தலைவர்கள் யாரும், குகையில் வாழ்ந்த குழந்த மனிதன் மதுவுக்காக ஒரு வார்த்தையை உதிர்க்கவில்லை. 

‘துபாயில் ஸ்ரீதேவி இயல்புக்கு மாறாக இறந்ததாக எப்படி நம் தலைவர்களுக்கு தெரியும்? அவர்கள் வருத்தப்பட்டதில் என்ன தவறு உள்ளது?’ என்று கேட்கலாம். ஆனால், வல்லரசாக துடிக்கின்ற ஒரு மாபெரும் தேசத்தின் ஜனாதிபதியும், பிரதமரும், அதிலடங்கும் மாநில முதல்வர்களும் அவசரப்பட்டு இப்படி அறிக்கை விட வேண்டிய அவசியமில்லையே. பொறுமை காட்டியிருக்கலாமே! நிதானமாய் இருந்து இறப்பிற்கான உண்மையான காரணம் தெரிந்த பிறகு பேசியிருக்கலாமே! அதைவிடுத்து ஏதோ சாதாரண ரசிகன் போல் எடுத்த எடுப்பிலேயே எமோஷனானது அபத்தமல்லவா!

இந்த தேசத்தில் லீடர்களை விட சில நேரங்களில் சிட்டிசன்கள் தெளிவாக உள்ளனர்.