இமாச்சலப் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவு காரணமாக,  தனுஷின் ‘அசுரன்’பட நாயகியும் பிரபல ,மலையாள நடிகையுமான மஞ்சுவாரியர் சிக்கிக்கொண்டுள்ளார். இவருடன் பட இயக்குநர் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்டோர் பயங்கர ஆபத்தில் சிக்கியுள்ளனர்.

வடமாநிலங்களில் கனமழை பெய்துவருகிறது. இதில் ராஜஸ்தான், டெல்லி, உத்தரபிரதேசம் உத்தராகண்ட், இமாச்சலப் பிரதேசம் உட்பட பல மாநிலங்கள் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கின்றன. இமாச்சலப்பிரதேசத்தில் கனமழை மற்றும் வெள்ளத்திற்கு இதுவரை 43 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு ஏற்பட்டுள்ள நிலச்சரிவு காரணமாக, பலப் பகுதிகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.குலு மாவட்டத்தில் உள்ள ரோடாக் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக மணாலி - லே தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. நிலச்சரிவில் ஏராளமான வாகனங்களும் சிக்கியுள்ளன. பல உயிர்ச்சேதங்கள் கணக்கிடப்பட முடியாத அளவுக்கு வெள்ளத்தின் சீற்றம் உள்ளது.

இந்நிலையில் மலையாளப் பட இயக்குனர் சணல்குமார் சசிதரன் (செக்ஸி துர்க்கா படத்தை இயக்கியவர்), இயக்கும் மலையாளப் படத்தின் ஷூட்டிங் இமாச்சலில் உள்ள சத்ரா பகுதியில் நடந்துவந்தது. ’கயாட்டம்’ என்ற இந்தப் படத்தில்  பிரபல நடிகை மஞ்சு வாரியர் ஹீரோயினாக நடித்துவருகிறார். இந்த சத்ரா பகுதியும் கனமழைக்கு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளதால், தனித்து விடப்பட்டுள்ளது. இணையதொடர்பு கிடைக்கவில்லை. போன்களும் வேலை செய்யவில்லை. இதனால், நடிகை மஞ்சுவாரியர், சணல் குமார் சசிதரன் உட்பட இந்தப் படக்குழுவைச் சேர்ந்த சுமார் 30 பேர் சிக்கிக் கொண்டனர். அவர்களுடன் சுற்றுலாவுக்கு அங்கு வந்த150க்கும் மேற்பட்டோரும்  சிக்கியுள்ளனர்.

இந்நிலையில், நேற்று இரவு 9 மணியளவில், உதவியாக கிடைத்த சேட்டிலைட் ஃபோன் மூலம், நடிகை மஞ்சுவாரியர், தனது தம்பி மதுவாரியரிடம் பேசினார். அப்போது தானும் படப்பிடிப்புக் குழுவினரும் ஆபத்தில்  சிக்கியிருப்பதைத் தெரிவித்துள்ளார். அவர்களிடம் உணவுப்பொருட்களும் தீர்ந்துவிட்டதாகக்குறிப்பிட்டுள்ளார்.இதையடுத்து மது வாரியர், மத்திய அமைச்சர் முரளிதரனிடம் உதவி கோரியுள்ளார். அவர், இமாச்சலப்பிரதேச முதல்வருக்கு தகவல் தெரிவித்ததாகக் கூறப் படுகிறது. நடிகை மஞ்சு வாரியர் நிலச்சரிவுப் பகுதிக்குள் சிக்கியிருக்கும் செய்தி கேரள திரையுலகை உலுக்கியிருக்கிறது. தமிழில் வெற்றிமாறன் தனுஷ் கூட்டணியில் ‘அசுரன்’படத்தின் மூலம் மஞ்சு வாரியர் அறிமுகமாவது குறிப்பிடத்தக்கது.