The Special Investigation Division of the Kerala Actress Tamil Nadu Police has filed a chargesheet in the Angamali court today.

கேரள நடிகை கடத்தல் வழக்கை விசாரணை செய்து வரும் சிறப்பு புனாய்வு பிரிவினர் அங்கமாலி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை இன்று தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் திலீப் 8-வது குற்றவாளியாகவும், அவரின் முதல் மனைவி மஞ்சுவாரியார் முக்கிய சாட்சியாகவும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

கடந்த பிப்ரவரி மாதம், மலையாள நடிகை படப்படிப்பு முடிந்து கொச்சிக்கு காரில் திரும்பிக் கொண்டிருந்த போது மர்மநபர்களால் கடத்தப்பட்டு, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். நடிகை அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார், பல்சர் சுனி உள்ளிட்ட 6 பேரை கைது செய்தனர். பல்சர் சுனி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு 85 நாட்கள் ஆலுவா சிறையில் அடைக்கப்பட்டார்.

ஜாமீன் கோரி 4 முறை உயர் நீதிமன்றத்திலும், திருவல்லா மாவட்டம் அங்கமாலி நீதிமன்றத்திலும் தாக்கல் செய்து அது நிராகரிக்கப்பட்டது. இந்த வழக்கில் முக்கிய துருப்புச் சீட்டாக இருக்கும் மெமரி கார்டு, கேமிரா ஆகியவை கிடைக்காததால் ஜாமீன்வழங்க போலீசார் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

5-வது முறையாக ஜாமீன் தாக்கல் செய்தபோது, பல நிபந்தனைகளுடன் திலீப்புக்கு உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இந்நிலையில், இந்த வழக்கை விசாரணை செய்து வரும் சிறப்பு புலனாய்பு பிரிவினர் ஏற்கனவே முதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துவிட்டனர். அதில் பல்சர் சுனி உள்ளிட்ட 7 பேர் முக்கியக் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டு இருந்தனர்.

இந்நிலையில், கூடுதல் குற்றப்பத்திரிகையை அங்கமாலி நீதிமன்றத்தில் இன்று சிறப்பு புலனாய்பு பிரிவினர் தாக்கல் செய்தனர். அதில் 8-வது குற்றவாளியாக நடிகர் திலீப், மேஸ்திரி சுனி, வழக்கறிஞர் பிரதீஷ் சாக்கோ, ராஜூ ஜோசப், விஷ்னு ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த துணை குற்றப்பத்திரிகையில் மொத்தம் நடிகர் திலீப் உள்ளிட்ட 14 குற்றவாளிகள் பெயரும், 385 சாட்சியங்கள், 12 ரகசிய வாக்குமூலங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. மலையாக திரைப்பட உலகில் இருந்து 50 பேர் சாட்சிகளாகச் சேர்க்கப்பட்டுள்ளனர். பல்சர் சுனி சிறையில் இருக்கும் போது நடிகர் திலிப்பை தொடர்பு கொள்ள உதவிய போலீசார் அணிஷ், விபின்லால் ஆகியோர் அப்ரூவர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கில் முக்கிய சாட்சியாக திலீப்பின் முதல் மனைவி மஞ்சு வாரியார் சேர்க்கப்பட்டுள்ளார். நடிகை கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவரம் வெளியே தெரிந்தவுடன், இதில் மிகப்பெரிய சதி நடந்துள்ளது என ஊடகங்களுக்கு கூறியவர் நடிகை மஞ்சு வாரியார் என்பது குறிப்பிடத்தக்கது.