தனது வீட்டில் வனத்துறை சட்டங்களுக்குப் புறம்பாக யானைத் தந்தங்கள் வைத்திருந்ததாக நடிகர் மோகன்லால் மீது ஏழு வருடங்களுக்கு முன்பு போடப்பட்ட வழக்குக்கு மீண்டும் உயிர் வந்துள்ளது. மோகன்லாலும் அவரது நண்பர்கள் மூவரும் மீண்டும் சட்டச்சிக்கலில் மாட்டியுள்ளனர்.

பிரபல மலையாள நடிகர் மோகன்லாலுக்கு சொந்தமான கொச்சி, திருவனந்தபுரம் மற்றும் சென்னையில் உள்ள வீடுகள், அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் கடந்த 2012 ஆம் ஆண்டு சோதனை நடத்தினர். இதில் அவரது கொச்சி வீட்டில் இருந்து 4 யானை தந்தங்கள் கைப்பற்றப்பட்டன. இதை வருமான வரித்துறையினர் வனத்துறையிடம் ஒப்படைத்தனர். சம்பவம் தொடர்பாக கோடநாடு வனத்துறையினர் மோகன்லாலுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்தனர்.அப்போது தனது செல்வாக்கைப் பயன்படுத்தி, யானை தந்தங்களை திருப்பிக் கேட்டு, அப்போதைய வனத்துறை அமைச்சர் திருவஞ்சூர் ராதாகிருஷ்ணனிடம் மோகன்லால் கோரிக்கை விடுத்தார். வனத்துறை சட்டப்படி யானை தந்தங்களை வீடுகளில் வைத்திருக்கக்கூடாது. ஆனால் சட்டத்தில் திருத்தம் செய்து அன்றைய கேரள அரசு தந்தங்களை, மோகன்லாலிடம் திருப்பி கொடுத்தது.

இதை எதிர்த்து ஏலூரைச் சேர்ந்த பவுலோஸ் என்பவர் கேரள உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், சட்டத்தை மீறி யானை தந்தங்களை மோகன்லாலுக்குத் திருப்பி கொடுத்ததற்கு அதிருப்தி தெரிவித்தனர். சம்பவம் நடந்து 7 ஆண்டுகள் ஆன பின்னரும் வழக்கை, அரசு முடிவுக்கு கொண்டு வராதது ஏன்? என்றும் கேள்வி எழுப்பி இருந்தனர்.இந்நிலையில், 7 வருடத்துக்கு பிறகு இந்த வழக்கில் கோடநாடு வனத்துறை நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. வன அதிகாரியான ஜி.தனிக்லால், பெரும்பாவூர் நீதிமன்றத்தில் இந்த குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தார். அதில், மோகன்லாலுடன் அவரது நண்பர்கள் ஒல்லூர் கிருஷ்ணகுமார், திருபுனித்துரா ராதாகிருஷ்ணன், சென்னையை சேர்ந்த நளினி ராதாகிருஷ்ணன் ஆகியோர் பெயர் இடம்பெற்றுள்ளது.

நாட்டின் நலனில் பெரிதும் அக்கறை கொண்ட பிரதமர் வேடத்தில் மோகன்லால் நடித்துள்ள ‘காப்பான்’படம் தமிழ்,தெலுங்கு, மலையாள மொழிகளில் நேற்று வெளியாகியுள்ளது.