சர்ச்சையின் பல மாற்றுப் பெயர்களில் ‘ராதாரவி’யும் ஒன்று. இது தமிழக அறிந்ததே. சக சினிமா துறை கலைஞர்களை, அரசியல் தலைவர்களை, சினிமா சங்க நிர்வாகிகளை, ரசிகர்களை என்று எல்லா தரப்பையும் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் ‘வாய்க்கொழுப்பு’ பொங்க விமர்சனம் செய்துவிடுவதும், அதன் பிறகு தாறுமாறான திட்டுக்களுக்கு ஆளாவதும் ராதாரவியின் வாடிக்கை. 

அந்த வகையில் சமீபத்தில் தமிழர்களை தரக்குறைவாக பேசியதான சிக்கலில் சிக்கியிருக்கிறார் இவர். அதாவது சினிமா துறையில் ராதாரவியின் 40 ஆண்டு காலம் நிறைவடைந்ததை ஒட்டி, அவரைப் பாராட்டி தெலுங்கு அமைப்புகள் சார்பில் ஒரு விழா சமீபத்தில் நடந்தது. அதில்  பேசிய ராதாரவி “தமிழகத்தின் மந்திரி சபையை அமைப்பதற்கு ஒரு பெரிய தூணாக இருப்பது தெலுங்கர் இனம். தேனியில் இருந்து திண்டுக்கல் வரை தெலுங்கு பேசுபவர்கள்தான்  தேர்தலில் நிற்கிறார்கள். நான் சார்ந்த சினிமா உலகத்திலேயே தெலுங்கர்கள்தான் அதிகமாக இருக்கிறார்கள். எனது இனம் தெலுங்கு இனம். ‘நான் தெலுங்குக்காரன்’ என அனைத்து இடத்திலும் சொல்லிக் கொள்கிறேன். நாம தமிழன் அது இதுன்னு சொல்றதெல்லாம் வேஸ்ட். தமிழன் எல்லாம் சும்மா. நோகாமல் நோன்பு வைப்பவர்கள் தமிழர்கள். இதையெல்லாம் நான் தைரியமாவே பேசுவேன்.” என்று விஷத்தை கொட்டிவிட்டார். 

இந்த விவகாரம் அந்த நிகழ்வு தாண்டி, வெளியில் பரவியதும் தமிழ் அமைப்புகள் கொந்தளிக்க துவங்கிவிட்டன. சினிமா உலகத்தினுள் இருந்தே முதல் குரல் வந்தது. ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம் “ராதாரவியை வாழ வைத்துக் கொண்டிருப்பது தமிழ்ச் சமுதாயம். ஆனால் அவர் தெலுங்கர் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டார். கர்நாடகத்திலெல்லாம் போய் இப்படி அவர் பேச முடியுமா? இத்தனை தமிழ் சினிமாவில் நடித்து சம்பாதித்துவிட்டு இன்று இப்படி பேசும் உங்களின் வார்த்தைகள் என்னைப் போன்ற தமிழர்களின் ரத்தத்தைக் கொதிக்க வைக்கிறது.” என்றிருக்கிறார். 

தமிழ் பேரரசு கட்சி!யின் பொதுச்செயலாளரான இயக்குநர் கவுதமன் “மிக மிக வன்மையாக இவரது பேச்சைக் கண்டிக்கிறேன். ராதாரவி, நீங்க  தமிழர்களின் பணத்தில்தான் வாழுறீங்க, தமிழர்களின் பணத்தில்தான் சாப்பிடுறீங்க, தமிழர்களின் பணத்தில்தான் உங்க காரே ஓடுது, தமிழர்களின் பணத்தில்தான் பல வீடுகளைக் கட்டியிருக்கீங்க. நன்றி மறந்துட்டு பேசுறது நாகரிகம் ஆகாது.” என்று சீறியிருக்கிறார். 

ராதாரவியின் பேச்சை கண்டித்து இணைய தளங்களிலும் போட்டுத் தாக்கியுள்ளனர் தமிழர்கள். அதில் சில இளைஞர்கள்  “தெலுங்குதான் உசுருன்னா! என்ன ம......க்கு தமிழ்நாட்டுல உட்கார்ந்திருக்க? உங்கப்பா, சித்தப்பா, உன் தம்பிக, உன் தங்கச்சி ராதிகா, அவங்க கடைசியா கல்யாணம் பண்ணின பச்சைத் தமிழன் சரத்குமார் எல்லாரும்  தமிழன் பணத்துலதான் வாழுறீங்க. 
நன்றி மறந்து பேசி நடுத்தெருவுக்கு வந்துடாதே!” என்று கொத்துக்கறி போட்டுள்ளனர். 

சவுண்டு கேட்குதா ராதாராரவி?