வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் இன்று தனது 6வது போட்டியில் ஆடிவரும் இந்திய அணி இறுதிப்போட்டியில் கோப்பையைத் தட்டிக்கொண்டு வருமா என்று ஒவ்வொரு இந்தியனும் ஏங்கிக்கொண்டிருக்க, அதே லார்ட்ஸ் மைதானத்தில் ‘83ம் ஆண்டு கோப்பையைத் தட்டி வந்த கபில்தேவ் திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.

பிரபல கிரிக்கெட் வீரர் கபில்தேவ். இவர் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, 1983-ம் ஆண்டு உலகக் கோப்பையை வென்றது. இதை மையமாக வைத்து, ’83 என்ற பெயரில் பிரம்மாண்ட பட்ஜெட்டில்  இந்திப் படம் உருவாகி வருகிறது. கபீர் கான் இயக்கும் இந்தப் படத்தில் அப்போது கேப்டனாக இருந்த கபில்தேவ்-ஆக ரன்வீர் சிங் நடிக்கிறார்.

அந்த அணியில் இடம்பெற்றிருந்த தமிழக வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கேரக்டரில் ஜீவா நடிக்கிறார். சந்தீப் பட்டீலாக, அவர் மகன் சிரங் நடிக்கிறார். மற்றும் பங்கஜ் திரிபாதி, சஹிப் சலீம், சாஹில் கட்டார், தாஹிர் ராஜ் பாசின் உட்பட பலர் நடிக்கின்றனர். மே மாதம் 15 ஆம் தேதி லண்டனில் படப்பிடிப்பு தொடங்கி நான்ஸ்டாப்பாக நடந்து வருகிறது. இங்கு மட்டுமே மொத்தம் நூறு நாள் படப்பிடிப்பு நடக்க உள்ள நிலையில் ஜுல14 அன்று ஒரிஜினல் மேட்ச் முடிந்தவுடன் ‘83 படத்துக்காக கபில்தேவ் கப் வாங்கும் க்ளைமேக்ஸ் காட்சிகள்  இதே லார்ட்ஸ் மைதானத்தில் படமாக்கப்பட உள்ளன.

ஆக இப்போதைக்கு லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியாவுக்கு ஒரு கப் உறுதி. கோலி அண்ட் கோவினர் மனது வைத்தால் இரண்டாவது கப்பையும் தட்டிக்கொண்டு வரலாம்.