இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு தமிழக அரசு சார்பில் நடத்த இருந்த பாராட்டு விழா தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
சிம்பொனி அரங்கேற்றம் செய்த இளையராஜா
தமிழ் திரையுலகின் அசைக்க முடியாத இசையமைப்பாளராக இருப்பவர் இளையராஜா. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் பணியாற்றி இருக்கிறார். சமீபத்தில் லண்டனுக்கு சென்று அங்கு சிம்பொனி இசையை அரங்கேற்றியது அவரது சாதனைகளில் மகத்தானதாக கருதப்படுகிறது. கடந்த மார்ச் 8-ம் தேதி வேலியண்ட் சிம்பொனியை லண்டனில் அரங்கேற்றம் செய்தார். இந்தியாவிலிருந்து முதல் முறையாக சிம்பொனி அரங்கேற்றம் செய்தவர் என்கிற பெருமையை இளையராஜா பெற்றார்.
இளையராஜாவுக்கு தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா
இளையராஜா அரங்கேற்றம் குறித்து பலரும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். முதல்வர் மு.க ஸ்டாலின் இளையராஜாவின் இல்லத்திற்கு நேரில் சென்று அவரை வாழ்த்தினார். அவர் லண்டனில் இருந்து தமிழகம் திரும்பிய பின்னர் தமிழக அரசு மரியாதையுடன் அவரை வரவேற்றார். இந்த நிலையில் இளையராஜாவின் திரையிசைப் பயணம் 50 ஆண்டுகள் நிறைவு பெறுவதை முன்னிட்டு, அவரது பிறந்த நாளான ஜூன் இரண்டாம் தேதி தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா நடத்தப்படும் என முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

தள்ளிப் போனது இளையராஜாவின் பாராட்டு விழா
சட்டசபையில் இது குறித்து சட்டசபையில் பேசிய முதல்வர் மு.க ஸ்டாலின், “சிம்பொனி அரங்கேற்றம் முடிந்து தமிழகம் திரும்பிய இளையராஜா என்னை சந்தித்தபோது சிம்பொனி இசை நிகழ்ச்சியை தமிழகத்தில் நடத்துவது குறித்து அவரிடம் கேட்டேன். 400 இசைக் கலைஞர்கள் கொண்ட குழுவை உடனடியாக நடத்துவது சிரமம் என்று கூறினார். இருப்பினும் 50 ஆண்டுகள் திரையிசைப் பயணத்தை நிறைவு செய்வதை முன்னிட்டு அவரது பிறந்த நாளான ஜூன் இரண்டாம் தேதி தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா நடத்தப்படும்” என அறிவித்திருந்தார்.
ஒரு நாள் முன்னதாக பிறந்தநாள் கொண்டாடும் இளையராஜா
இந்த நிலையில் இளையராஜாவுக்கு நடத்தப்பட இருந்த பாராட்டு விழா சில காரணங்களால் தள்ளிப் போய் உள்ளது. இதற்கான காரணம் குறித்து தெளிவாக கூறப்படவில்லை. இருப்பினும் இன்னொரு தினத்தில் இளையராஜாவுக்கு விழா நடத்தப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. ஜூன் மூன்றாம் தேதி பிறந்த இளையராஜா, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி மீது கொண்ட மரியாதை காரணமாக அவரது பிறந்தநாளில் தான் பிறந்தநாள் கொண்டாடப் போவதில்லை என்று ஒருநாள் முன்னதாக தனது பிறந்த நாளை கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது.


