‘படம் பார்க்கப்போற நீங்க கற்பனை செய்துகூட பார்க்க முடியாத, ஹீரோயின் சம்பந்தப்பட்ட அதிர்ச்சிகரமான ஒரு சமாச்சாரம் இடைவேளைக்கு அப்புறமா வருது. அது சம்பந்தமா தயவு செய்து உங்க விமர்சனங்கள்ல எழுதவேண்டாம்’ என்று ‘தாதா 87’ பட பிரிவியூவின்போது  மீடியாக்காரகளுக்கு அன்பு வேண்டுகோள் வைத்தார் இயக்குநர் விஜய் ஸ்ரீ.ஜி.

சின்ன ஆண்டவரோட அண்ணன் பெரிய ஆண்டவர் 87 வயசுல ஒரு இளம்பாட்டியை  லவ் பண்ற சமாச்சாரத்தை விட இன்னும் என்ன அதிர்ச்சியை ஒரு டைரக்டரால கொடுத்துட முடியும் என்று சற்று அலட்சியமாக இருந்தால் நீங்கள் க்ளீன் போல்ட். நாயகன் ஆனந்த் பாண்டி, நாயகியாக வரும் பேரழகி ஸ்ரீ பல்லவியை விழுந்து புரண்டு காதலிக்க, மிகுந்த பில்ட் அப்புக்குப்பின் காதலை ஏற்றுக்கொள்ளும் அவர், ஒரு நீண்ட லிப் கிஸ்ஸுக்குப் பின், பாண்டி பாத் ரூமில் பினாயிலால் வாயைக் கழுவிக்கொள்ளும் அளவுக்கு ஒரு உண்மையைச் சொல்லுகிறார். யெஸ் தலைப்பில் சொன்ன அதே சமாச்சாரம் தான்.

தான் ஒரு பெண் அல்ல திருநங்கை என்று ஸ்ரீபல்லவி சொன்னவுடன்  ஆனந்த் பாண்டி அடையும் அதிர்ச்சியை விட பலமடங்கு அதிக அதிர்ச்சிக்கு ஆளாவது படம் பார்க்கும் ரசிகர்கள்தான். ஏற்கனவே சில காட்சிகளுக்கு முன் தனது பழைய காதலியை 87வது வயதில் சந்தித்து ‘வளையோசை கலகலவென’ பாடலை முனுமுனுக்கும் தாத்தா சாருஹாசனின் காதலுக்கே என்ன மாதிரி ரியாக்ட் பண்ணுவது என்று தெரியாமல் ரசிகர்கள் தவியாய்த் தவித்துக்கொண்டிருக்கும் வேளையில், அடுத்த இந்த அதிர்ச்சியை எப்படி தாங்குவது?

எனிவே தெலுங்கில் ஏற்கனவே மூன்று படங்களில் நடித்து பிரபலாமாகியிருக்கும் ஸ்ரீபல்லவி இப்படி ஒரு பாத்திரத்தில் நடிக்க முன்வந்த துணிச்சலை எவ்வளவு பாராட்டினாலும் தகும். நீங்க நடிச்ச கேரக்டரை பல்லைக்கடிச்சு மறந்துட்டு வி லவ் யூ ஸ்ரீபல்லவி. வெல்கம் டு தமிழ்சினிமா.