திரைப்படங்களில் இடம்பெறுவதைவிடவும் ஆட்சேபகரமான கற்பழிப்புக் காட்சிகளையும் வசனங்களையும் ‘கல்யாண வீடு’ தொடரில்  ஒளிபரப்பியதால் சன் தொலைக்காட்சிக்கு இரண்டரை லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அத்தொடர் வெளியாகும் அடுத்த ஒரு வாரத்துக்கு தொடர்ந்து மன்னிப்புக் குறிப்பு ஒன்றையும் வெளியிட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

சன் தொலைக்காட்சியில் தினமும் ஒளிபரப்பாகி வரும் சீரியல் ’கல்யாண வீடு’. மெட்டி ஒலி புகழ் திருமுருகன் இந்த சீரியலை தனது திரு பிக்சர்ஸ் பெயரில்  தயாரித்து வருகிறார்.கடந்த மே மாதம் 14 மற்றும் 15-ம் தேதிகளில் ஒளிபரப்பான இந்தக் கல்யாண வீடு சீரியலின் எபிசோட்கள் அப்போதே பெரும் சர்ச்சையைக் கிளப்பின.

இந்த சீரியலில் ரோஜா எனும் கேரக்டரில் நடித்து வரும் நடிகை ஒருவர் கூலிப் படையினரை அணுகி தனது தங்கையை ’கதறக் கதற கற்பழிக்கணும்’ என்று கூறுகிறார்.மேலும் என் தங்கச்சிக்கு இன்னும் கல்யாணம் ஆகல, அவ கன்னிப் பெண்.. அதனால அவள் மீது இரக்கமே காட்டக்கூடாது என்றும் ரோஜா சொல்றார்.மேலும் நீங்க கற்பழிக்கப் போவது என்னுடைய தங்கை என்கிற பச்சாதாபம் எல்லாம் இருக்க கூடாது, முடிந்த அளவிற்கு மிக கொடூரமாக அவளை கற்பழிக்கணும் என்றும் ரோஜா சொல்கிறார்.இதனை ஏற்று கூலிப்படை தலைவர் முதலில் ரோஜாவின் தங்கையை கதறக் கதற கற்பழிக்கிறார். பிறகு அவனது கூலிப்படையில் உள்ளவர்களும் அவரைக் கற்பழிக்கின்றனர்.மிகவும் ஆபாசமாகவும் அறுவெறுப்பாகவும் இந்த இரண்டு எபிசோட்கள் இருந்ததாக பொதுமக்களிடம் இருந்து புகார்கள் வந்துள்ளன.

மேலும் தொலைக்காட்சிகள் மீது புகார் அளிக்கும் த பிராட்கேஸ்டிங் கன்டென்ட் கம்ப்ளய்ன்ட் கவுன்சிலிலும்[ BCCC] இது குறித்து பலரும் புகார் அளித்திருக்கிறார்கள்.இதன் அடிப்படையில் சீரியலை ஒளிபரப்பிய சன் டிவிக்கும் சீரியலைத் தயாரித்த திரு பிக்சர்ஸூக்கும் அந்தக் கவுன்சிலில் இருந்து நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டது.

நீண்ட விவாதங்களின் முடிவில் இருவரும் கொடுத்த விளக்கம் திருப்திகரமாக இல்லை என்று கூறி,.ஆபாசமான காட்சிகளை ஒளிபரப்பியதற்காக சன் தொலைக்காட்சிக்கு 2.5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருப்பதாகத் தகவல்.அதோடு மட்டும் அல்லாமல் இந்த சீரியல் ஒளிபரப்பாகும் அடுத்த ஒரு வாரமும் துவக்கத்தில் 30 நொடிகள் அந்த காட்சியை ஒளிபரப்பியதற்கு சன் தொலைக்காட்சி நேயர்களிடத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் த பிராட்கேஸ்டிங் கன்டென்ட் கம்ப்ளய்ன்ட் கவுன்சில் உத்தரவிட்டுள்ளதாகத் தகவல்.இந்த தண்டனையை ஏற்றுக்கொண்டு 2.5லட்சம் அபராதம் செலுத்தவும் அடுத்த ஒரு வாரத்துக்கு மன்னிப்புக் குறிப்புகள் வைக்கவும் சன் டிவி ஒப்புக்கொண்டுள்ளதாம்.