The actresss explanation for Drunk and Drive car accident

வேலூரில் படப்படிப்பை முடித்துவிட்டு சுனிதா காரில் வந்துகொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டிருக்கிறது. இது சம்பந்தமாக சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வைரலானது. அந்த வீடியோவில், தாறுமாறாக கார் ஓட்டி விபத்து ஏற்படுத்தியதாக காரை மறித்த பொதுமக்கள் திட்டியது போன்று காட்சிகள் இருந்தன.

இந்த நிலையில், இது குறித்து விளக்கம் அளித்த சுனிதா. “நான் குடித்துவிட்டு கார் ஓட்டவில்லை. எனக்கு காரே ஓட்டத் தெரியாது. லைசென்ஸ் கூட கிடையாது. என்னுடைய டிரைவர்தான் ஓட்டிவந்தார். நான் பின் சீட்டில் அசதியாக உறங்கிக்கொண்டு வந்தேன். விபத்து ஏற்பட்டதும் காரில் இருந்து இறங்கிய பின்னர்தான் இது மிகப் பெரிய விஷயமாக மாறியதை உணர்ந்தேன்.

இந்த விபத்தில் இரண்டு வண்டிகளும் சேதமடைந்தன. எனது டிரைவர் மீதுதான் தவறு அதை நான் மறுக்கவில்லை. விபத்து ஏற்படுவது இயல்புதான். ஆனால், மற்றவர் மீது பழி போடுவது தவறு. நான் காரில் இருந்து இறங்கியதும் அங்கு கூறியிருந்த பொதுமக்கள் என்னை அசிங்கமாகத் திட்டிப் பேசினார்கள். அதற்கு நான் எப்படி பதில் சொல்வது கூட எனக்குத் தெரியவில்லை, தமிழ் எனக்கு அவ்வளவாகத் தெரியாது. அவர்கள் பேசியது அரைகுறையாகப் புரிந்தது. அதுதான் எனக்கு வருத்தமாக இருந்தது.

அப்போது அங்கிருந்தவர்கள் போட்டோஸ், வீடியோஸ் எடுக்க ஆரம்பித்தனர். அதனால் தான் நான் அங்கிருந்து கிளம்பும்படி ஆகிவிட்டது. எனக்கு மொழி புரியாததால் அவர்களுக்குச் சரியான பதில் சொல்ல முடியவில்லை.

இந்த விபத்து குறித்து முறையாக சட்ட ரீதியாக அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த விபத்தில் எதிர் தரப்பினருக்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை. ஆனால், பொதுமக்கள் எதற்காக என்னை அப்படி அசிங்க அசிங்கமாக பேசினார்கள் எனப் புரியவில்லை” இவ்வாறு கூறினார்.