ட்விட்டரில் நம்பர் ஒன் இடத்தில் ட்ரெண்டிங் ஆகாத குறையாக கடந்த இரு தினங்களாக வைரலாகிவரும் விஷால், அனிஷா ரெட்டி திருமண ரத்து செய்திக்கு 48 மணிநேரங்கள் கடந்தும் இதுவரை விஷால் தரப்பில் எந்த பதிலும் இல்லை. விஷால் முற்றிலும் தொடர்பு எல்லைக்கு வெளியே போயிருக்க அவரது சுற்று வட்டாரமோ மயான அமைதி காக்கிறது.

நடிகர் விஷால் மற்றும் நடிகை அனிஷா அல்லா ரெட்டி இருவருக்கும் வருகிற அக்டோபர் 9 ஆம் தேதி திருமணம், அதுவும் நடிகர் சங்கக்கட்டிடத்தின் முதல் திருமணமாக  நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், அனிஷா அல்லா ரெட்டி விஷாலுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நீக்கியுள்ளார். இதனால், விஷால் – அனிஷா அல்லா ரெட்டி இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக திருமணம் நிறுத்தப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து அனிஷா மற்றும் விஷால் இருவரும் இதுவரை எந்த விளக்கமும் தெரிவிக்கவில்லை.

நடிகர் விஷாலுக்கும் ஐதராபாத்தைச் சேர்ந்த தொழிலதிபர் விஜய் ரெட்டியின் மகளும் நடிகையுமான அனிஷா ரெட்டிக்கும் இடையே இந்த ஆண்டு மார்ச் மாதம் ஐதராபாத்திலுள்ள பிரபல தனியார் ஓட்டலில் திருமணம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. நிச்சயதார்த்த விழாவில் விஷாலுக்கும் அனிஷா அல்லா ரெட்டிக்கும் அக்டோபர் 9 ஆம் தேதி திருமணம் நடத்துவது என இரு வீட்டார்களும் முடிவெடுத்தனர். இந்த நிச்சயதார்த்த விழாவில், மலையாள சினிமா நடிகர் மோகன்லால், நடிகர் சூர்யா, கார்த்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.நிச்சயதார்த்த விழாவில் விஷாலுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை அனிஷா அல்லா ரெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு மகிழ்ச்சி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், அனிஷா அல்லா ரெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஷாலுடன் எடுத்துக்கொண்ட நிச்சயதார்த்த விழா புகைப்படங்கள் உட்பட அனைத்தையும்  நேற்று முன் தினம் நீக்கியுள்ளார். மேலும், விஷால் – அனிஷா அல்லா ரெட்டி ஆகிய இருவருக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக திருமணமும் நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து இரு தரப்பும் மவுனம் காத்து வரும் நிலையில் விஷாலின் படப்பிடிப்புகளில் அவரை கண்காணிக்க அனிஷா சில ஒற்றர்களை நியமித்திருந்ததாகவும் அவர் கடைசியாக நடித்த நான்கெழுத்து ஹீரோயினுடன் ஒரே அறியில் தங்கிய தகவல்கள் ஆதாரத்துடன் வந்ததாலேயே அனிஷா விஷாலுக்கு எதிரான முடிவை எடுத்ததாகவும் கூறப்படுகிறது.