மற்ற மாநிலங்களில் மதுபானக்கடை திறந்தும் தமிழக அரசு திறக்காமல் இருந்ததற்கு பிரபல தமிழ் நடிகை பாராட்டி ட்வீட் செய்துள்ளார். 

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை  42,836 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 29 ,685 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பரவியவர்களில்11,762 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர். ஆனாலும், இந்த கொடிய வைரசுக்கு நாடு முழுவதும் இதுவரை 1, 389 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதற்கிடையில், கொரோனா பரவுவதை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு காரணமாக அனைத்து மாநிலங்களிலும் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த மே 17-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், ஊரடங்கில் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது. குறிப்பாக வைரஸ் பாதிக்கப்பட்ட பகுதிகள் சிவப்பு, மஞ்சள், பச்சை என மூன்று மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அதில், பச்சை மண்டல பகுதிகளில் மதுக்கடைகளை திறக்கலாம் என்று மத்திய அரசு, தான் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்திருந்தது.  இதனையடுத்து, பெங்களூரு, மகாராஷ்ரா, டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் மதுபான கடைகள் இன்று முதல் இயங்கி வருகிறது. ஆனால், தமிழகத்தில் டாஸ்மாக் கடை திறப்பதற்கான எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. 

இந்நிலையில், டாஸ்மாக்கை திறக்காத தமிழக அரசுக்கு பிரபல தமிழ் சினிமா நடிகை  கஸ்தூரி வாழ்த்து கூறி ட்வீட் செய்துள்ளார். அதில், டாஸ்மாக் கை  இப்போது திறப்பதில்லை என்ற நல்ல முடிவை எடுத்துள்ள தமிழக அரசுக்கு  நன்றி நன்றி. நானும் கூட கண்டிப்பாக திறப்பார்கள் என்றே  எண்ணினேன். என் கணக்கு தப்பாய் போனதில் எனக்கு ரொம்ப மகிழ்ச்சி. தாய்மார்கள், குழந்தைகள் சார்பாக மீண்டும் நன்றி என்று பதிவிட்டுள்ளார். ஆனால், இவரது டுவிட்டர் பதிவுக்கு சரக்கு இல்லாமல் கடுப்பில் இருந்து வரும் குடிமகன்கள் பார்த்தால் அவ்வளவு தான்.