இந்திய சினிமாவையே மிரட்டிய அமரேந்திர பாகுபலியின் நன்றி....
ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா ஷெட்டி, தமன்னா, ரம்யா கிருஷ்ணன் மற்றும் சத்தியராஜ் ஆகியோரும் நடித்துள்ள பாகுபலி படத்தின் இரண்டாம் பாகம் உலகம் முழுவதும் வெளியாகி வசூலிலும், விமர்சனத்திலும் சக்க போடு போட்டு வருகிறது.
பாகுபலி படத்தின் நட்சத்திர நாயகன் பிரபாஸ், வசூலில் ஆயிரம் கோடிகளைக் கடந்த முதல் இந்திய திரைப்பட நாயகன். திரையிட்டு பத்து நாட்களுக்குள் அந்த வசூல் சாதனையைப் படைத்திருப்பது ஒரு சரித்திரம்.
பாகுபலி 2 திரையிடப்பட்ட ஒன்பது நாட்களில் இந்தியாவில் ரூ. 800 கோடியையும், வெளிநாடுகளில் ரூ. 200 கோடியையும் வசூலித்து இச்சாதனையை படைத்துள்ளது.
முதல் நாளில் சுமார் ரூ. 125 கோடியில் துவங்கிப் பின், வெகு வேகமாய் தொடர்ச்சியாய் அடுத்தடுத்த நாட்களில் முந்தைய பாக்ஸ் ஆபிஸை அதகளம் பண்ணியது. பல நூறு கோடிகளைக் கடந்து ஒன்பதாவது நாளில் ரூ. 1000 கோடியை அள்ளியது பாகுபலி 2.
இந்த காவிய படைப்பில், அமரேந்திர பாஹுபலியாய் தன்னுடைய அசாத்தியமான, அப்பழுக்கற்ற நடிப்பை வெளிபடுத்திய பிரபாஸ், உலகளாவிய அளவில் ரசிகர்களைத் தன் பக்கம் ஈர்த்துள்ளார்.
பாகுபலி 2 க்கு கிடைத்திருக்ககூடிய இந்த இமாலய வெற்றிக்கு தேசங்களைக் கடந்து, மொழிகளைக் கடந்து தன்னுடைய ரசிகர்களுக்கும், இயக்குனர் ராஜமௌலி அவர்களுக்கும் பிரபாஸ் தன்னுடைய நன்றியை தெரிவித்துள்ளார்.
பிரபாஸ் அளித்த பேட்டியில்; “மகத்தான இந்த தருணத்தில் என்னுடைய ஒவ்வொரு ரசிகரையும் ஆரத்தழுவி மகிழ்கிறேன். அவர்கள் என்மீது வைத்துள்ள அன்பில் திளைத்து நெகிழ்ந்து போய் இருக்கிறேன். நான் சிரமேற்கொண்டு எடுத்த அத்தனை முயற்சிகளும் படக்காட்சிகளில் சிறப்பாக அமைந்து, இந்தியா மட்டுமில்லாமல் உலகெங்கிலும் உள்ள உங்களுடைய பேரன்பைப் பெற்று தந்துள்ளது.
மேலும், இத்தனைப் பிரம்மாண்டமான ஒரு வரலாற்றுக் காவியத்தில், என் மீது நம்பிக்கை வைத்து, என்னையும் இந்த பயணத்தில் இணைத்துக்கொண்டு, எனக்கொரு முக்கிய பங்களித்து, என்னை ஊக்குவித்து சிறப்புற இயக்கி, இந்த மாபெரும் வெற்றிக்கு வித்திட்ட ராஜமௌலி அவர்களுக்கு மகிழ்ச்சியோடும், நெகிழ்ச்சியோடும் மனநிறைவோடும் என்னுடைய நன்றியை தெரிவிக்கிறேன். இவ்வாறு பிரபாஸ் தெரிவித்துள்ளார்.