Asianet News TamilAsianet News Tamil

ஒரு ரூபாய் வைத்து என்ன செய்வார்கள் விவசாயிகள்... விஷாலை தாக்கி பேசிய தங்கர்பச்சான்...

thanker bachan attack letter for vishal
thanker bachan-attack-letter-for-vishal
Author
First Published Apr 12, 2017, 6:53 PM IST


நடிகர் சங்க பொதுச்செயலாளரும், தயாரிப்பாளர் சங்க தலைவரும்மான,   விஷால், தன்னுடைய முதல் அறிவிப்பாக விவசாயிகளுக்கு உதவும் ஒரு ரூபாய் திட்டம் ஒன்றை அறிவித்தார். 

இதன்படி திரையரங்குகளில் வசூலாகும் ஒவ்வொரு டிக்கெட்டில் இருந்தும் ஒரு ரூபாய் எடுத்து அதை விவசாயிகளுக்கு தரவுள்ளதாக அறிவித்தார். இந்த திட்டத்திற்கு ஏற்கனவே திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் தற்போது பிரபல இயக்குனர் தங்கர்பச்சான் விஷாலின் ஒரு ரூபாய் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நடிகர் விஷாலுக்கு தங்கர்பச்சான் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

"130 கோடி மக்களுக்குத் தேவையான உணவை உற்பத்திசெய்து தரும் உழவனால், அவன் உற்பத்தி செய்யும் விவசாயப் பொருளுக்கு விலை வைத்துக்கொள்ள முடிய வில்லை. 

ஒரு குடும்பம் முழுவதுமே இரவு பகலாக உழைக்கிறார்கள். அறுவடைக்குப் பின் அவர்கள் முதலீடு செய்த பணம் கூட திரும்பி வருவதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. அத்தனை பேர்களுக்கும், அவ்வளவு கால உழைப்பையும் கணக்கிட்டு அதற்கான ஊதியம், முதலீடு, அதற்குமேல் கூடுதலாக லாபம் எனச் சேர்த்து உற்பத்திப் பொருளுக்கான விலை கொடுத்தால் விவசாயிகள் எதற்காக போராடப்போகிறார்கள்?

இதுபோன்ற விஷயங்களைப் புரிந்துகொள்ளாமல் நடிகர் விஷால் போன்றவர்கள் ஏதோ ஒரு விவசாயியின் வங்கிக் கடனை மட்டும் அடைக்க பணம் கொடுப்பதும், விவசாயத்துக்கு உதவ நிதி திரட்டப் போகிறேன் எனச் சொல்வதும், ஒரு சினிமா டிக்கெட் கட்டணத்தில் ஒரு ரூபாய் விவசாயிகளுக்கு தரப் போவதாக அறிவிப்பதும் விவசாயிகளுக்கு பயனளிக்காது.

நடிகர் விஷால் மனது வைத்திருந்தால் இந்த 15 வருடங்களில் தமிழர்களின் பிரச்சினைகளில் ஏதாவது ஒன்று குறித்தாவது ஒரு படத்தில் நடித்திருப்பார். 

ஈழத் தமிழர்களின் துயரம், போராட்டம் குறித்த ’தாய் மண்’ என்னும் கதையை நான் அவரிடம் சொல்லி அவர் கேட்கும் சம்பளத்தை கொடுக்கத் தயாராக இருந்தபோதும் ஏனோ அந்தப் படத்தில் நடிக்க அவர் மறுத்துவிட்டார்.

இன்றைய திரைப்படக் கலையுலகம் முழுக்க அந்தந்த பகுதி மக்களின் வாழ்க்கையையும், சிக்கல்களையும் பேசிக் கொண்டிருக்கிறது. ஆனால், நீங்கள் கதாநாயகன் என்கிற பேரில் நடைமுறைக்கு உதவாத வன்முறைகளை விதைத்துக் கொண்டும், பெண்ணுடலை சந்தைப்படுத்தி ஆடவிட்டுக்கொண்டும் இயல்பான திரைப்படம் ஒன்றைக் கூட உருவாக்காமல் இருக்கிறீர்கள்.

தயாரிப்பாளர்களின் பணத்தில் இருந்து ஒரு டிக்கெட்டில் ஒரு ரூபாய் தருவதாக அறிவித்திருக்கிறீர்கள். நானும் ஒரு தயாரிப்பாளன் என்கிற முறையில் கேட்கிறேன்; நீங்கள் பல படங்களில் நடித்திருக்கிறீர்கள். பல படங்களை சொந்தமாக தயாரித்திருக்கிறீர்கள். 

அதில், எத்தனை படங்களில் முதலீடு செய்த பணம் திரும்பி வந்திருக்கிறது? ஒருவேளை லாபம் கிடைத்திருந்திருந்தால், அது ஒரு சிலருக்குத்தான் என்பதும் உங்களுக்குத் தெரிந்திருக்கும். செலவு செய்த பணம்கூட திரும்பி வராமல் செத்து மடியும் விவசாயிகளின் நிலைதான் இன்று தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர்களின் நிலையும்.

தயாரிப்பு செலவில் பாதிக்கும் மேல் நடிகர்களின் சம்பளத்துக்கே போய்விடுகிறது. அதனால் பல தயாரிப்பாளர்கள் நஷ்டப்பட்டு, திரைத்துறையைவிட்டே போய் விடுகிறார்கள். தற்கொலையும் செய்துகொண்டுவிடுகிறார்கள். எரிகிற வீட்டில் பிடுங்கும்வரை லாபம் என கேட்கிற பணத்தை வாங்கிக்கொண்டு நீங்கள் சென்றுவிடுகிறீர்கள்.

Follow Us:
Download App:
  • android
  • ios