Asianet News TamilAsianet News Tamil

'கருமேகங்கள் கலைகின்றன' படமல்ல வாழ்க்கை - இயக்குநர் பாரதிராஜா புகழாரம்!

இயக்குநர் தங்கர் பச்சான் இயக்கத்தில், இயக்குநர் பாரதிராஜா, இயக்குநர் கௌதம்மேனன் போன்றோர் நடிக்கும் படம் “கருமேகங்கள் கலைகின்றன”. படத்தின் செய்தியாளர் சந்திப்பு இன்று நடந்தது. இதில் படம் குறித்து இயக்குனர் பாரதி ராஜா புகழ்ந்து பேசியுள்ளார்.
 

thankar bachan directing karmegangal kalaigirathu movie press meet
Author
First Published Dec 29, 2022, 12:33 AM IST

“கருமேகங்கள் கலைகின்றன” படம் குறித்து தங்கர் பச்சான் பேசும் போது, படத்தின் படப்பிடிப்பு 4 நாட்களில் முடிவடைந்து விடும். எப்போதோ முடிந்திருக்க வேண்டியது, சிறு தடங்களால் தாமதமாகிவிட்டது. ஆனால், அதுவும் நல்லதுக்குத்தான். பாரதிராஜா ஐயாவின் உடல்நிலை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது. அவர் முன்பே வருகிறேன் என்று கூறினார். ஆனால், நன்றாக ஓய்வு எடுத்த பிறகு படப்பிடிப்பை  வைத்துக் கொள்ளலாம் என்று நான் கூறிவிட்டேன்.
 
இதுவரை 10 படங்களை இயக்கியிருக்கிறேன். ஒளிப்பதிவு பணிகள் என்று இந்த படத்தையும் சேர்த்து மொத்தம் 53 படங்களில் பணியாற்றியிருக்கிறேன். 10 படங்களின் கதைகளை எடுத்துக் கொண்டு போவேன். ஆனால், அது பல மாற்றங்கள் அடைந்து வேறு ஒரு படமாக மாறிவிடும். நினைப்பதை எடுக்கும் சூழல் இன்னும் இங்கு வரவில்லை, இந்த படத்தில் அப்படி நிகழ்ந்துவிடக் கூடாது என்பதில் பிடிவாதமாக இருந்தேன். அதற்கு காரணம், சிறிதும் செயற்கைத்தனம் இல்லாத, புனைவு இல்லாத, நம்பகத்தன்மை இல்லாத ஒரு காட்சி, ஒரு உரையாடல் கூட இருக்கக் கூடாது. ஒரு இயல்பான வாழ்க்கையைப் பார்த்த அனுபவம், படம் பார்ப்பவர்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். ஏனென்றால், திரைப்பட கலையைக் கண்டுபிடித்து 110 ஆண்டுகள் கடந்து விட்டது. இருப்பினும், நாடகத்தன்மையுடைய சினிமா உருவாக்குவதிலும், உண்மைக்கு மாறாக சினிமாக்களை உருவாக்கி மக்களை திசை திருப்புகிறது என்ற ஆதங்கம் எனக்குள் இருக்கிறது. திரைப்பட கல்வியை கல்வியாகவே படித்ததால் வந்ததே தவிர வேறு ஒன்றுமில்லை. இப்படத்தை குறித்து மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். 2006 ஆம் ஆண்டு இந்த கதை எழுதப்பட்டது. ஒவ்வொரு முறை முயற்சி செய்தும் படமாக்க வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை. அதற்கான தயாரிப்பாளரும், நடிகர்களும் அமையவில்லை.

thankar bachan directing karmegangal kalaigirathu movie press meet

எனக்கு தெரிந்த வரை தமிழ்நாட்டில் சிறுதானியத்தை மட்டும் கொண்ட உணவகம் திருச்சியில் தவிர வேறு எங்கும் இல்லை. நஷ்டம் வந்தாலும் பரவாயில்லை என்று நம் தொன்மம் மாறாமல் இப்படத்தின் தயாரிப்பாளர்  வீரசக்தி கொடுத்து வருகிறார் என்று கேள்விப்பட்டு சாப்பிட போகும் போது அவருடைய நட்பு எனக்கு கிடைத்தது. இந்த கதையை கேட்டவுடன் நாம் படமாக்குவோம் என்று கூறினார். நான் அதை நம்பாமல், பின் வாங்க மாட்டீர்களே? என்று கேட்டேன். சினிமாவைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. ஆனால், இந்த கதையில் அனைத்தும் இருக்கிறது, நெகிழ்ச்சியாக இருக்கிறது. இதுபோன்ற படங்களுக்காகத் தான் மக்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அது எடுக்காததால் தான் மற்ற படங்களைப் பார்க்கிறார்கள். அதன்பிறகு யாரைத் தேர்வு செய்வது என்று யோசிக்கும்போது ராமநாதன் என்ற பாத்திரத்திற்கு பாரதிராஜா அண்ணன் தான் பண்ண வேண்டும் என்று முடிவு செய்துவிட்டேன். இவரைத் தவிர வேறு யாராலும் நடிக்க முடியாது. அவர் இல்லையென்றால் இந்த படமே எடுக்கப் போவதில்லை என்று முடிவெடுத்தேன். அவரிடம் கதையைக் கூறினேன். அவரும் ஒப்புக் கொண்டார். 

வீரமணி கதாபாத்திரத்திற்கு ஒரு நடிகரிடம் கேட்டேன். தேதிகள் ஒத்து வராததால் அவரை நடிக்க வைக்க முடியவில்லை. யோகிபாபுவை நகைச்சுவை நடிகர் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதை உடைக்கும் வகையிலான கதாபாத்திரம் . அவர் எப்படி நடிக்க போகிறார்? என்று நினைத்தேன். எள்ளளவும் நகைச்சுவை இல்லாத பாத்திரம், ஏற்கனவே 15 படங்கள் உங்களுக்கு இருக்கிறது. இப்படத்திற்கு நிறைய நாட்கள் தேவைப்படும் என்றேன். கதையைக் கேட்டுவிட்டு உருகிவிட்டார். கண்டிப்பாக நான் நடிக்கிறேன் என்றார். அதன்பிறகு தான் படமாக தொடங்கியது. 

thankar bachan directing karmegangal kalaigirathu movie press meet

கோமகன் என்ற பாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடிக்கிறார். இதுவரை நீங்கள் பார்க்காத கௌதம் மேனனை இப்படத்தில் பார்ப்பீர்கள். பொதுவாக ஒரு படத்தில் 5 காட்சிகள் உருக வைக்கும் படியாக இருந்தாலே அந்த படம் மாபெரும் வெற்றி பெற்ற படம். அப்படி இந்த படத்தில் 20 காட்சிகள் இருக்கிறது. ஒவ்வொரு காட்சியிலும் மக்கள் ஒன்றி விடுவார்கள். அடுத்தது பெண் கதாபாத்திரத்திற்கு அதிதியை பாலனை தேர்ந்தெடுத்தோம். ‘அழகி’ நந்திதா தாஸிடம் ஏற்பட்ட அனுபவம் தான் அவரிடம் ஏற்பட்டது. ஏனென்றால், இந்த கதாபாத்திரத்தை சாதாரணமாக யாரும் நடித்திட  முடியாது. இலக்கிய சிந்தனையும் அனுபவம் முதிர்ச்சியும் இருந்தால் தான் இந்த பாத்திரத்தில் நடிக்க முடியும். அதிதி அதற்கு பொருத்தமாக இருந்தார்.  

அடுத்து மகானா என்ற பெண்ணின் கதாபாத்திரம் அனைவரையும் அசைக்கும். குழந்தை நட்சத்திரமாக சாரல் என்ற சிறுமி நடித்திருக்கிறார்.

முதல் முறையாக ஜிவி பிரகாஷ் உடன் இந்த படத்தில் பணியாற்றுகிறேன். அவருடைய இசை 80 வயது அனுபவம் வாய்ந்தது போல் இருக்கும். அவரிடம் பன்னிசை, மெல்லிசை, ஹிந்துஸ்தானி, கர்நாடகா என்று அனைத்து இசைகளும் இருக்கின்றதை நினைத்து ஆச்சரியமாக இருக்கும். இந்த படத்திற்கு சினிமாவிற்கென்று அமைத்து வைத்திருக்கும் மெட்டுக்களில் அடங்காத பாடல்கள் வேண்டும். அதேபோல் பாடல் வரிகளும் இருக்க வேண்டும். ஒன்பது ரூபாய் நோட்டு நாவலை படித்ததும், கவிஞர் வைரமுத்து இந்த படத்தில் இருப்பதே பெருமை தங்கர் என்று கூறினார். ஒரு பாடலுக்கான சம்பளம் கூட நான் கொடுக்கவில்லை. அதேபோல், இந்த படத்திற்கும் எழுதிக் கொடுத்திருக்கிறார். அழகி படம் தான் என்னுடைய கடைசி படம் என்று லெனின் அறிவித்தார். இந்த படத்தின் திரைக்கதையை படிக்க கொடுத்து, வரவேண்டும் என்றதும் வந்துவிட்டார். கலை மற்றும் ஒளிப்பதிவிற்கு சிறந்த கலைஞர்கள் கிடைத்திருக்கிறார்கள்.

thankar bachan directing karmegangal kalaigirathu movie press meet

 எப்போதும் ஒரு தரமான படைப்பு தனக்கு தேவையானதை தானே தேடிக் கொள்ளும். அதுபோலத்தான் கருமேகங்கள் கலைகின்றன திரைப்படமும் இருக்கிறது. இப்படம் ஏதோ ஒன்றை செய்யப் போகிறது என்பது மட்டும் உறுதி. படத்தை மார்ச் மாதம் வெளியிட உள்ளோம். தரமான திரைப்படங்களை மக்கள் திரையில் கண்டிருந்தால் நான் இன்னும் 50 படங்கள் எடுத்திருப்பேன். மசாலா படங்களை மட்டுமே திரையில் காண விரும்புகிறார்கள். ஆகையால், மக்களின் மனநிலை மாற வேண்டும் என்பது என்னுடைய வேண்டுகோள்.

காலம் காலமாக மக்கள் மனதில் படிந்து போன பண்பாட்டின் அடையாளம் ராமேஸ்வரம். இப்படத்திற்கான தளம் அங்கு இருப்பதால் எடுத்தோம். புதிய படங்கள் அனைத்தும் வட தமிழ்நாட்டில் மட்டுமே படப்பிடிப்பு நடத்தப்பட்டிருக்கும். இப்படம் வாழ்க்கையை மையப்படுத்தி இருக்கும். வாழ்க்கையின் வளர்ச்சி, வீழ்ச்சி, தேடல், அன்பு பரிமாறுதல், விட்டுக் கொடுத்தல் என்று அனைத்தும் இருக்கும். ஒருவர் மீது அளவு கடந்த அன்பு வைத்துவிட்டால் அதனால் வரும் துன்பங்கள் என்ன என்பதை கூறும் படம். அதற்காக நாம் யாரும் மீதும் அன்பு வைக்காமல் இருக்க முடியாது என்றார்.

இயக்குனர் பாரதிராஜா பேசும் போது, பிரமாண்டம் என்பது கனவு காண்பது. ஆனால், இப்படம் யதார்த்தமான வாழ்க்கையை கூறும் படம். கனவில் நீங்கள் இந்திரலோகம் வரை சென்று வரலாம். வாழ்க்கையில் அப்படி முடியாது. தங்கர் பச்சான் சிறந்த எழுத்தாளன், சிறந்த படைப்பாளி என்பது உங்களுக்கே தெரியும். 30 வருடங்களுக்கு முன்பு இதனுடைய கவிதை தொகுப்பை நான் வெளியிட்டு இருக்கிறேன். அந்த புத்தகத்தை படித்ததும் இவனுக்குள் இப்படி ஒரு எழுத்தாளனா என்று ஆச்சரியப்பட்டேன். எழுதுவது என்பது வேறு, சினிமா எடுப்பது என்பது வேறு. ஆனால், இரண்டையும் சிறப்பாக செய்திருக்கிறான்.

thankar bachan directing karmegangal kalaigirathu movie press meet

இப்படத்தில் ஓய்வு பெற்ற நீதிபதியாக நடித்திருக்கிறேன். எனக்கு மகனாக இயக்குனர் கௌதம் மேனனும், மகளாக அதிதியும் நடித்திருக்கிறார்கள். இப்படம் மார்ச் மாதம் வெளியாகிறது. பத்திரிகையாளர்கள் அனைவரும் மக்களுக்கு கொண்டு சேர்க்கும் படி கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

இயக்குனர் கௌதம் மேனன் பேசும்போது, தங்கர் பச்சான் எனக்கு ஒரு நல்ல நண்பர். அவர் கேட்டு என்னால் இல்லை என்று கூற முடியாது. பள்ளிக்கூடம் படத்திற்கு கேட்டார் அப்போதிருந்த சூழ்நிலை காரணமாக முடியாது என்று கூறி விட்டேன். ஆனால், இந்த படத்திற்கு முடியாது என்று சொல்ல முடியவில்லை. லாக்டவுன் சமயத்தில் எனக்கு நிறைய அறிவுரை கூறினார், நிறைய பேசினார்.

இந்த படத்தின் கதையை கூட கேட்காமல் ஒப்புக்கொண்டேன். பிறகு கதையை படிக்கும் போது ராமநாதன் கதாபாத்திரத்தில் யார் நடிக்கிறார்கள் என்று கேட்டேன். பாரதிராஜா சார் என்றதும் எனக்கு ஒரு கதவு திறந்தது போல் இருந்தது. சாருடன் 20 நாட்கள் கூட இருக்கும் வாய்ப்பு கிடைக்கும். அதேபோல், முன்பு அவரிடம் உதவி இயக்குநராக பணியாற்ற முயற்சி செய்தேன் என்பது அவருக்கு தெரியாது. ஆகையால், இது சிறந்த வாய்ப்பாக இருக்கும் என்று கருதினேன். அதன்படி 15 நாட்கள் முடிந்து விட்டது. இந்த பத்திரிகையாளர் சந்திப்பு முடிந்ததும் அதிதியுடன் ஒரு காட்சி இருக்கிறது.

இந்த கதை நாவலாக வர வேண்டியது, படமாக எப்படி வந்திருக்கிறது என்று பார்க்க ஆவலாக இருக்கிறேன். இந்த படத்தில், வீட்டில் என்ன செய்கிறோமோ அதை இங்கு வந்து செய்தது போல் இருந்தது. நான் எப்போதும் என்னை நடிகனாக நினைத்தது கிடையாது. இப்போது இங்கு உட்கார்ந்து இருக்கும் பொழுது கூட வேறொருவர் இடத்தில் உட்கார்ந்து இருக்கிறேன் என்று எண்ணம் தான் தோன்றுகிறது. நான் என்னை எப்போதும் இயக்குநராகத்தான் நினைத்துக் கொண்டிருக்கிறேன் என்றார்.

thankar bachan directing karmegangal kalaigirathu movie press meet

நடிகை அதிதி பேசும்போது, பெரிய இயக்குநர்கள் ஜாம்பவான்கள் குழுவுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்ததை எனது பாக்கியமாக கருதுகிறேன். இவர்கள் அனைவருடனும் நடித்தது எனக்கு மிகப்பெரிய அனுபவமாக இருந்தது. தங்கர் பச்சன் சார் கதை கூறும்போது ஒரு மகளிடம் பேசுவது போல ஒவ்வொன்றாக கூறினார் என்றார். ஒளிப்பதிவாளர் என்.கே.ஏகாம்பரம் பேசும்போது, நான் மாணவனாக இருக்கும்போது ஒளிப்பதிவாளராக வகுப்பு எடுக்க வந்தவர் தங்கர்பச்சான் சார். அவருடைய படத்திற்கு என்னை ஒளிப்பதிவாளராக கேட்டார். அவர் பெரிய ஒளிப்பதிவாளர், அவருடைய படத்திற்கு என்னால் சிறப்பாக பணியாற்ற முடியுமா என்று தயங்கினேன். இது இயற்கை சார்ந்த படம். ஆகையால், அவர் நினைத்தது போல எடுத்திருக்கிறேன் என்று நம்புகிறேன். இப்படத்தில் பணியாற்றியதில் பெருமை கொள்கிறேன் என்றார்.

தயாரிப்பாளர் டி.வீரசக்தி பேசும்போது, தங்கர் பச்சானுடன் எனக்கு 12 ஆண்டுகால நட்பு. அடிக்கடி நாங்கள் சந்தித்து பேசிக் கொள்வோம். அப்படி ஒரு நாள் பேசிக் கொண்டிருக்கும் போது இந்த கதையை கூறினார். என்னால் அதிகமாக செலவு செய்ய முடியாது என்று கூறினேன். அதுமட்டுமில்லாமல் பெரிய ஜாம்பவான் இயக்குநர்கள் நடிக்கும் போது அவர்களுக்கு சம்பளம் கொடுப்பது பெரிய பட்ஜெட் ஆகி விடும் என்று நினைத்தேன். ஆனால், அவர்கள் தரமான படத்திற்கு பணம் முக்கியம் இல்லை என்று நடிக்க முன் வந்தார்கள். தயாரிப்பாளர்களுக்கு ஏற்ற இயக்குநர்கள் குறைவு. அதில் ஒருவர் தங்கள் பச்சான் சார். அதிகம் செலவாகுவதை விரும்ப மாட்டார். ஒரு படத்தை வெற்றி படமாக்கும் சக்தி பத்திரிகையாளர்களிடம் இருக்கிறது. ஆகையால், நீங்கள் தான் வெற்றி படமாக கொண்டு சேர்க்க வேண்டும் என்றார்


 

Follow Us:
Download App:
  • android
  • ios