நாட்டில் எதுவுமே நடக்காவிட்டாலும் ‘என்னங்க நடக்குது இங்க?’என்று சதாசர்வ காலமும் கூவிக்கொண்டே இருந்த தங்கர் பச்சான் தரப்பிலிருந்து கடந்த மூன்று நான்கு மாதங்களாக மயான அமைதி நிலவியதை கவனித்தீர்களா? அந்த இடைவெளியில் தனது மகன் விஜித் பச்சானை வைத்துத் தொடங்கிய படப்பிடிப்பை ஒரே மூச்சில் முடித்துவிட்டார். அப்படத்துக்கு தாடிக்காரர் டி.ஆர்.பாணியில் ‘டக்கு முக்கு திக்கு தாளம்’என்று விபரீதமாக தலைப்பு வைத்திருக்கிறார்.

‘மலைச்சாரல்’என்ற படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகி அஜீத்தின் ‘காதல்கோட்டை’ மூலம் பிரபலமாகி ‘அழகி’படத்தின் மூலம் இயக்குநர் அவதாரமும் எடுத்தவர் தங்கர்பச்சான். முதல் இரண்டு படங்களான ‘அழகி’,’சொல்ல மறந்த கதை’க்குப் பின்னர் தொடர்ந்து குழப்பமான படங்களைக் கொடுத்துவந்த தங்கர் ஒரு கட்டத்தில் ஹீரோவாகவும் நடிக்க ஆரம்பித்து தான் மிகவும் விரும்பிய தமிழ் சமூகத்தை தர்ம சங்கடத்தில் ஆழ்த்தினார். 

இதனால் அவர் சினிமாவிலிருந்து முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்ட நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன் தனது மகனை கதாநாயகனாக அறிமுகம் செய்து ஒரு படம் இயக்கப்போவதாக பூஜை போட்டார். அந்த ஹீரோவுக்கு விஜித் பச்சான் என்ற வினோத பெயர் சூட்டியதை வலைதளவாசிகள் கிண்டலடிக்க ஆரம்பித்துள்ளனர். தமிழில் முன்னணி நடிகர்களாக உள்ள விஜய் பெயரில் முதலெழுத்தையும் மீதி இரண்டு எழுத்துக்களை அஜீத் பெயரிலிருந்தும் எடுத்து தங்கர் தனது மகனுக்கு வி’ஜித் என்று பெயர் சூட்டியிருப்பதாக அந்த சமயத்தில் பெரும் பங்கத்துக்கு ஆளானார் தங்கர்.

தன்னைப் போல் சீரியஸான பாத்திரங்கள் எடுபடாது என்று நினைத்தோ என்னவோ முதல் படத்திலேயே தன் மகன் விஜித் பச்சானை நகைச்சுவைப் பாத்திரத்தில் நடிக்க வைத்திருக்கிறார். இத்திரைப்படத்தில் முனீஸ்காந்த் நாயகனுக்கு இணையான முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.சென்னை நகரத்தை மையப்படுத்தி எடுக்கப்படும் படமென்பதால் சென்னை சுற்றிலுமுள்ள பல்வேறு பகுதிகளில் ஒரே கட்டமாக படப்பிடிப்பு நடத்தப்பட்டிருக்கிறது. 70 நாட்கள் ஆன நிலையில் இன்றுடன் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. டக்கு முக்கு திக்கு தாளச் சத்தம் தீபாவளிக்கு அடுத்த நவம்பர் மாதத்தில் ஒலிக்கும் என்று தெரிகிறது.